சோல்: தீரா நோயால் அல்லது உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட 20, 30 வயது மதிக்கத்தக்கவர்களைப் பங்கேற்பாளர்களாகக் கொண்ட ‘லவ் அகெய்ன்ஸ்ட் டைம்’ (Love Against Time) என்ற புதிய தென்கொரிய நிகழ்ச்சி ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
காதலர்களைத் தேடிக்கொள்ள வகைசெய்யும் அந்த நிகழ்ச்சியை, ‘எஸ்பிஎஸ்’ தொலைக்காட்சி நிறுவனம் ஆகஸ்ட் 3ஆம் தேதி ஒளிபரப்பவுள்ளது.
மிகவும் தனிப்பட்ட அனுபவங்களைக் கேளிக்கையாக மாற்றுவதன் நெறிமுறை குறித்து அந்த நிகழ்ச்சி தற்போது பலரின் விமர்சனங்களுக்கும் கண்டனங்களுக்கும் உள்ளாகியுள்ளது.
அந்நிகழ்ச்சி எவ்வாறு இருக்கும் என்பது பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளபோதிலும், அதன் ஒரு முக்கிய அம்சத்தை தயாரிப்பு நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது.
அதன்படி, பங்கேற்பாளர்கள் காதல் பந்தங்களை வளர்த்துக்கொள்ளும் ஒரு வழியாக, தங்களுக்கு இருக்கும் எஞ்சிய நேரத்திலிருந்து குறிப்பிட்ட அளவை தினமும் இரவில் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்வர்.
நிகழ்ச்சியின் அதிகாரபூர்வ விளம்பரக் காணொளிகளில், பங்கேற்பாளர்கள் தங்களது அனுபவங்களைத் திறந்தமனத்துடன் பேசுகின்றனர். தீரா நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் வாழ பலரும் தயங்குவதால், தங்களுக்குக் காதலிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே கிடைத்ததாகச் சிலர் கூறுகின்றனர்.
வேறு சிலரோ, ஒரு காலத்தில் காதலைத் தங்களால் பெற முடியாத ஒரு சொகுசாகவே கருதியதாக விவரிக்கிறார்கள்.
இந்நிகழ்ச்சியை லீ இயூன் சோல் இயக்குகிறார். இவர் இதற்கு முன்பு காதல் துணையைத் தேடும் ‘ஜென் ஸி’ ஜோதிடர்களை ஒன்றிணைத்த ‘ஃபோர்ச்சூன் டெல்லர்ஸ் லவ்’ (Fortune Tellers’ Love) என்ற நிகழ்ச்சியை இயக்கியவர்.
புதிய நிகழ்ச்சிக்குப் பொதுமக்கள் மத்தியில் பலதரப்பட்ட விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஒரே மாதிரியான அனுபவங்களைக் கொண்டவர்கள் தங்களுக்கு ஏற்ற வாழ்க்கைத் துணையைச் சந்திப்பதற்கான வாய்ப்பை அந்த நிகழ்ச்சி உருவாக்குவதாகக் கூறி, அதன் ஆதரவாளர்கள் அந்த முயற்சியைப் பாராட்டியுள்ளனர்.
அது போன்ற நபர்களுக்கு இயல்பான சூழலில் இணையரைத் தேடுவது கடினமாக இருந்திருக்கலாம் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இருப்பினும், வேறு சிலரோ இந்நிகழ்ச்சியின் விளம்பர உத்தியைக் கடுமையாகச் சாடியுள்ளனர்.
பங்கேற்பாளர்களின் பலவீனமான சூழ்நிலைகளை ஒரு கேளிக்கையாக மாற்றுவதோடு, சுவாரசியமான ஒரு நிகழ்ச்சியை உருவாக்குவதற்காக அவர்களின் தனிப்பட்ட போராட்டங்களை வியாபார உத்தியாக மாற்றும் அபாயம் அதில் உள்ளதா என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


