சுகாதாரப் பணியாளர்களுக்காக $7 மில்லியன் நிதி திரட்டிய இரண்டாம் உலகப்போர் வீரர்

சுகாதாரப் பணியாளர்களுக்காக $7 மில்லியன் நிதி திரட்டிய இரண்டாம் உலகப்போர் வீரர்

2 mins read
7929bf97-590e-4760-9d76-70404d46818a
இந்த மாத இறுதியில் 100வது பிறந்த நாளைக் கொண்டாடும் அவர், தனது வீட்டில் இருக்கும் 25 மீட்டர் நீள தோட்டத்தில் 100 தடவை நடந்து கடந்து, இணையம் வழியாக நன்கொடைத் திரட்டில் ஈடுபட்டுள்ளார். ஊன்றுகோலைப் பிடித்தபடி தற்போது நடக்கும் இவர், இரண்டாம் உலகப்போர் சமயத்தில் இந்தியாவில் பணியில் இருந்தார். படங்கள்: ராய்ட்டர்ஸ், ஏஎஃப்பி -

99 வயதான, இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற, டாம் மூர் எனும் வீரர் கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிரான போரில் முக்கிய பங்கு வகிக்கும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்காக 4 மில்லியன் பவுண்ட்டுக்கும் (S$7.13 மில்லியன்) மேற்பட்ட தொகையை நன்கொடையாகத் திரட்டியுள்ளார்.

இந்த மாத இறுதியில் 100வது பிறந்த நாளைக் கொண்டாடும் அவர், தனது வீட்டில் இருக்கும் 25 மீட்டர் நீள தோட்டத்தில் 100 தடவை நடந்து கடந்து, இணையம் வழியாக நன்கொடைத் திரட்டில் ஈடுபட்டுள்ளார். ஊன்றுகோலைப் பிடித்தபடி தற்போது நடக்கும் இவர், இரண்டாம் உலகப்போர் சமயத்தில் இந்தியாவில் பணியில் இருந்தார்.

நீ, நான் என போட்டிபோட்டுக்கொண்டு மக்கள் நன்கொடையை வாரிக் கொடுத்திருக்கின்றனர்.

அண்மையில் இடுப்பு முறிவு, புற்றுநோய் ஆகியவற்றுக்காக மருத்துவ சிகிச்சை பெற்ற அவர், முதலில் தேசிய சுகாதார சேவை அறக்கொடைக்காக 1,000 பவுண்டுகளைத் திரட்டத் திட்டமிட்டார்.

தெற்கு இங்கிலாந்தில் உள்ள பெட்ஃபோர்ட்ஷைர் பகுதியில் வசிக்கும் அவர், 70வது தடவையாக தோட்டத்தில் நடந்து முடித்தபோதே ஒரு மில்லியன் பவுண்ட் நன்கொடை திரட்டப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவுக்கு எதிரான போரில் மருத்துவர்களும் தாதியரும் அற்புதமான பணியை ஆற்றுவதாகக் குறிப்பிட்ட அவர், "இரண்டாம் உலகப்போரின்போது வீரர்கள் சீருடை அணிந்து முன்னிலையில் சென்று போரிட்டனர்; தற்போதைய போரில், ராணுவமாக மருத்துவர்களும் தாதியரும் சீருடையில் செயல்படுகின்றனர்," என்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்.

"இதனை நாம் கடப்போம்," என்று நம்பிக்கையுடன் கூறிய அவரது நன்கொடைத்திரட்டுக்கு 70,000 பேர் நிதியுதவி அளித்துள்ளனர்.

அந்த நிதித்திரட்டில் ஈடுபட்ட JustGiving இணையப்பக்கமே தற்காலிகமாகத் திணறிப்போகும் அளவுக்கு மக்கள் நன்கொடையை அதிவிரைவில் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

திரு மூர் மற்றும் வேறு சிலரும் ஈடுபட்டுத் திரட்டும் நிதி, தேசிய சுகாதாரச் சேவை ஊழியர்களுக்கான நலவாழ்வுத் தொகுப்புக்கு, ஓய்வு மற்றும் சிகிச்சை பெறுவோருக்கான அறைகள் அமைக்க, சிகிச்சை பெறுவோர் தங்களது குடும்பத்தாருடன் தொடர்புகொள்வதற்கான மின்னியல் சாதனங்கள் வாங்க, நோயாளிகளை மீண்டும் சமூகத்தில் இணைப்பதற்கு போன்றவற்றுக்காகச் செலவிடப்படும் என்று பிபிசி குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்