கோலாலம்பூர்: ‘ஆபரேஷன் வைக்கிங்’ என்னும் தேடுதல் நடவடிக்கையின்கீழ் காவல்துறை நடத்திய வேட்டையில் கிட்டத்தட்ட 409 மில்லியன் ரிங்கிட் (S$127.9 மில்லியன்) மதிப்பிலான சொத்துகளை மலேசியக் காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.
சட்டவிரோதச் செயல்பாடுகள் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக அந்தத் தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டதாக மலேசிய உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளில் 8 அசையாச் சொத்துகள், 11 வாகனங்கள், 417 மத்திய டெபாசிட்டரி சிஸ்டம் கணக்குகள், ஏறத்தாழ 323.59 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 70 பங்கு வர்த்தகக் கணக்குகள், ஏறத்தாழ 85.62 மில்லியன் ரிங்கிட் இருப்பு வைக்கப்பட்டுள்ள 404 வங்கிக் கணக்குகள் ஆகியன அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
செப்டம்பர் 25ஆம் தேதி நிலவரப்படி, இது தொடர்பாக மொத்தம் 70 பேர் வாக்குமூலம் அளிப்பதற்காக வரவழைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.
“விசாரணையில் உள்ள செயல்பாடுகளுடன் தொடர்புடையவை என்று நம்பப்படும் பல்வேறு சொத்துகளை முடக்குதல், பறிமுதல் செய்தல் மற்றும் பலரைத் தனிப்பட்ட முறையில் கைது செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை காவல்துறை எடுத்துள்ளது,” என்று திரு சைஃபுதீன் தெரிவித்தார்.
முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற அமைச்சரவையின் உத்தரவைத் தொடர்ந்து, ‘கார்ப்பரேட் மாஃபியா’ குற்றச்சாட்டுகள் மீதான காவல்துறை விசாரணையின் வரம்பு மற்றும் தற்போதைய நிலை குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
வாக்குமூலம் பதிவு செய்ய அழைக்கப்பட்டவர்களின் பின்னணி மற்றும் அடையாளங்களை ஆய்வு செய்ததில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் அதிகாரிகள் எவரும் இதில் சம்பந்தப்படவில்லை என்பதும் விசாரணைக்கு உதவும் வகையில் அவர்கள் அடையாளம் காணப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளதாக திரு சைஃபுதீன் கூறினார்.
‘ஆபரேஷன் வைக்கிங்’ மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் விசாரணை அறிக்கைகளை இறுதிசெய்யும் பணியில் காவல்துறை ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
“நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு இணங்க விசாரணையை நடத்துவதில் காவல்துறை உறுதியுடன் உள்ளது என்பதை அமைச்சு உறுதி செய்கிறது,” என்றார் அவர்.
