இணையப் பாதுகாப்புக்கு பெருநிறுவன ஆதரவு தேவை: ஆஸ்திரேலியா

இணையப் பாதுகாப்புக்கு பெருநிறுவன ஆதரவு தேவை: ஆஸ்திரேலியா

படம்: ராய்ட்டர்ஸ்

20 Sep 2026 - 4:59 pm

1 mins read

சிட்னி: சிறார்களுக்கான இணையப் பாதுகாப்புச் சட்டத்தை நிறுவவும் செயற்கை நுண்ணறிவுக்கான அதிக விதிமுறைகளை செயல்படுத்தவும் பெருநிறுவனங்களின் ஆதரவை நாடுவதாக ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி அல்பனீஸ் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 20) தெரிவித்தார்.

பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் அமைப்பின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான டிம் கூக்கை பிரதமர் அல்பனீஸ் அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் சந்தித்த பிறகு கருத்துரைத்தார்.

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமையகத்தில் சனிக்கிழமை அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. சிறார்களை இணையத்தின் அபாயத்திலிருந்து பாதுகாக்கும் முயற்சியை தனியாக மேற்கொள்ளமுடியாது என்று திரு அல்பனீஸ் குறிப்பிட்டார்.

“இணையத்தில் உள்ள ஆபத்துகளிலிருந்து சிறார்களைக் காப்பதில் நாங்கள் எடுத்துவரும் செயல்பாடுகளை விவாதித்தோம். மேலும் செய்யவேண்டிய பணிகள் குறித்தும் பேசினோம். ஆஸ்திரேலியர்களின் இணையப் பாதுகாப்பிற்கான வலுவான விதிமுறைகளை நாங்கள் முன்வைப்போம்,” என்று அவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.

இதோடு, ஆப்பிள் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இணையப் பாதுக்காப்பு அரண்களை உருவாக்கும் முயற்சிகளை வேகப்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆஸ்திரேலியப் பிரதமரின் கூற்றைப் பகிர்வதாக திரு கூக் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். சிறார்களை இணையத்தில் பாதுகாக்க வலுவான உள்ளுணர்வுப்பூர்வ கட்டுப்பாடுகள் இருக்கவேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

2025ஆம் ஆண்டில், உலகிலேயே 16 வயதுக்குட்பட்ட சிறார்களை சமூக ஊடகப் பயன்பாட்டில் இருந்து தடை செய்த முதல் நாடாக ஆஸ்திரேலியா விளங்கியது. சிறுவர்களைக் குறிவைத்து நடக்கும் இணையத் துன்புறுத்தலுக்கு எதிராக அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்