இந்தோனீசியாவில் நாட்பட்ட நோயாகஉருவெடுத்துள்ள ஊழல்

2 mins read
790c01bf-9065-4d74-9c05-75b48caf76db
சமூக உதவி நிதியை தவறாகக் கையாண்டது குறித்து இந்தோனீசிய மத்திய வங்கி விசாரிக்கப்படுகிறது. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் ஊழல், நாட்பட்ட நோயாக உருவெடுத்துள்ளது மட்டுமல்லாமல் எளிதில் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு நவீனமாகவும் மாறியுள்ளது என்று நிபுணர்கள் சிலர் கூறியுள்ளனர்.

அந்நாட்டின் ஊழல் தடுப்பு அமைப்பான கேபிகே, மத்திய வங்கியை ஊழல் தொடர்பில் விசாரித்து வருகிறது.

சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் நலனுக்கான சமூக உதவி நிதியை அவ்வங்கி தவறாகக் கையாண்டது தொடர்பில் அந்த விசாரணை நடைபெற்று வருகிறது.

லாப நோக்கற்ற அமைப்புகளின் வழியாக சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் சமூக உதவி நிதி வழங்கப்பட்டது.

ஆனால், தன்னைத் தற்காத்துப் பேசிய மத்திய வங்கி (பிஐ), சட்டத்துக்கு உட்பட்டு செயல் பட்டதாகவும் அறநிறுவனம் வழியாக சமூக உதவிகளை வழங்க அத்தகைய நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறியது.

டிசம்பர் 17ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய கேபிகே, பல மாதங்களுக்கு முன்பே விசாரணை தொடங்கிவிட்டதாகவும் தெரிவித்தது.

இந்நிலையில், ஜனவரி 2ஆம் தேதி பேசிய கேபிகேயின் விசாரணை இயக்குநர் ஆசெப் குன்டுர் ரஹாயு, பேங் இந்தோனீசியாவிடமிருந்து நிதி பெற்ற அமைப்புகள் சில எம்.பி.க்களுடன் தொடர்பு இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதாகத் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சில குறிப்பிட்ட அறநிறுவனங்களையோ அல்லது தனக்குச் சொந்தமான அறநிறுவனங்களைப் பரிந்துரைக்கலாம் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், பொதுக் கொள்கை நிபுணரான ட்ரூபஸ் ரஹார்டியன்ஸ்யா, இந்தோனீசிய மத்திய வங்கியின் விவகாரம் நாட்டின் பல ஊழல்களுக்கு மிகச்சிறிய உதாரணம் என்றார்.

இந்தோனீசியாவில் ஊழல் மிகவும் வேரூன்றிவிட்டதாகவும் அதிநவீனமாக மாறியுள்ளதாகவும் அவர் சொன்னார்.

ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கு உறுதியான நடவடிக்கைகள் தேவை என்று அவர் வலியுறுத்தினார்.

இந்தோனீசியாவின் நாடாளுமன்றம் நிதி, எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளை மேற்பார்வையிட 13 குழுக்களைக் கொண்டுள்ளது.

இதுவரை மத்திய வங்கியை மேற்பார்வையிடும் நாடாளுமன்ற நிதிக் குழுவின் இரு உறுப்பினர்கள் விசாரிக்கப்பட்டுள்ளனர்.

ஒருவர், தேசிய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த திரு சடோரி, மற்றொருவர் ஆளும் ஜெரிந்திரா கட்சியின் ஹெரி குணவன் ஆவர்.

அந்த நிதிக் குழுவில் எட்டு தேசிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 45 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்று உள்ளனர்.

“சமூக உதவி நிதியானது, குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டது. எங்கள் இருவருக்கும் மட்டும் வழங்கப்படவில்லை. அந்த நிதி, தேர்தல் மாவட்டங்களில் உள்ள சமூகத் திட்டங்களுக்கானது,” என்று டிசம்பர் 27 அன்று ஊடகங்களிடம் திரு சடோரி தெரிவித்தார்.

தற்போதைய விசாரணையானது மத்திய வங்கி தொடர்பில் நடைபெறும் 3வது வழக்கு விசாரணையாகும்.

குறிப்புச் சொற்கள்