செலவினக் குறைப்பு: அமெக்ஸ் நிறுவனத்தில் 5% ஆட்குறைப்பு

செலவினக் குறைப்பு: அமெக்ஸ் நிறுவனத்தில் 5% ஆட்குறைப்பு

படம்: புளூம்பெர்க்

25 Oct 2026 - 4:57 pm

2 mins read

நியூயார்க்: நிறுவனத்தின் செலவினங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் (அமெக்ஸ்) நிறுவனம் உலகளவில் தனது ஊழியர்களில் ஐந்து விழுக்காட்டினரைக் குறைக்க முடிவு செய்துள்ளது.

நிறுவனத்தில் மொத்தம் 78,000 ஊழியர்கள் பணிபுரிவதாகவும் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையால் ஏறத்தாழ 3,500 பேர் வேலையிழப்பார்கள் என்றும் அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் ஸ்குவேரி புளூம்பெர்க் தொலைக்காட்சிக்குத் தெரிவித்தார்.

அண்மை மாதங்களாக நிதித்துறை சார்ந்த பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அதிகரித்திருப்பதே இத்தகைய மாற்றங்களுக்கு முக்கியக் காரணம் என்று ஒரு சிலர் கருதுகின்றனர்.

இச்சூழலில், இந்த வாரம் பார்கிளேஸ் வங்கி 5,000 பேரை ஆட்குறைப்பு செய்ய இருப்பதாக அறிவித்தது. இதேபோல், பிரிட்டனில் உள்ள தனது சொத்து நிர்வாகப் பிரிவில் ஆட்குறைப்பை மேற்கொள்ள எச்எஸ்பிசி ஹோல்டிங்ஸ் திட்டமிட்டு வருவதாக அக்டோபர் தொடக்கத்தில் புளூம்பெர்க் செய்தி வெளியிட்டிருந்தது.

சிட்டிகுரூப் நிறுவனமும் தனது ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்து வருகிறது. அக்டோபர் 23ஆம் தேதியன்று சந்தைப் பகுப்பாய்வாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் பேசிய திரு ஸ்குவேரி, நிறுவனத்தை மேலும் துடிப்பானதாக, செயல்திறன்மிக்கதாக மாற்றவும் தேவையில்லாத நிர்வாக அடுக்குகளைக் குறைத்து முடிவுகளை விரைவாக எடுப்பதற்காக இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகக் குறிப்பிட்டார்.

அமெக்ஸ் நிறுவனம் தனது மூன்றாவது காலாண்டு வருமான முடிவுகளை வெளியிட்ட பின்னரே இந்த ஆட்குறைப்பு அறிவிப்பை வெளியிட்டது. மூன்றாவது காலாண்டில் நிறுவனத்தின் சரிசெய்யப்பட்ட ஒரு பங்கிற்கான வருமானம் 4.68 அமெரிக்க டாலராக உயர்ந்து, புளூம்பெர்க் ஆய்வில் நிதி வல்லுநர்கள் கணித்த சராசரி மதிப்பீடான 4.49 அமெரிக்க டாலரைத் தாண்டியது.

இதனைத் தொடர்ந்து, தனது முழு ஆண்டுக்கான வருவாய் வழிகாட்டுதல் மதிப்பீட்டையும் நிறுவனம் உயர்த்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
ஆட்குறைப்புஅமெரிக்காசெயற்கை நுண்ணறிவு