வாஷிங்டன்: ஈரான் போருக்காக அமெரிக்க ராணுவம் இதுவரை 47 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் (S$60.25 பி.) அதிகமான தொகையைச் செலவிட்டுள்ளதாக அமெரிக்கத் தற்காப்பு அமைச்சின் தரவுகளை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது, தற்காப்பு அமைச்சு கடந்த ஜூலையில் கணித்திருந்த மதிப்பீட்டைவிட 25 விழுக்காட்டுக்கும் அதிகம்.
அமெரிக்காவில் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறும் இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக, ஈரான் போரால் ஏற்பட்டுள்ள அரசியல் தாக்கத்தை எதிர்கொள்ள குடியரசுக் கட்சியினர் திணறி வரும் நிலையில், போருக்கான செலவு அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளி வந்துள்ளது.
போருக்காகப் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்துகளை ஈடுசெய்ய 29 பில்லியன் டாலருக்கும் அதிகமான நிதி தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போரால் இழக்கப்பட்ட ஆளில்லா வானூர்திகள் உள்ளிட்ட விமானங்களையும் ராணுவ உபகரணங்களையும் மாற்றுவதற்கு 6 பில்லியன் டாலருக்கும் மேல் தேவைப்படும்.
தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்சத் ஜூலையில் கணித்திருந்த 37.5 பில்லியன் டாலரைவிட தற்காப்பு அமைச்சின் தற்போதைய மதிப்பீடு அதிகமாக உள்ளது.
