பிரிட்டனில் பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கை: எட்டு பேர் கைது

1 mins read
c2407c83-5ab0-4f58-95c4-483330ed9701
கோப்புப் படம்: - இணையம்

லண்டன்: பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட இரு வெவ்வேறு பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளில் எட்டு ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பிட்ட சில இடங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தும் திட்டம் தொடர்பில் ஏற்கெனவே திட்டமிடப்பட்ட விசாரணையின் ஓர் அங்கமாக சனிக்கிழமை (மே 3) பல்வேறு இடங்களில் ஐவர் கைது செய்யப்பட்டதாக மாநகர காவல்துறைப் பிரிவு ஞாயிற்றுக்கிழமை (மே 4) அறிக்கையில் தெரிவித்தது.

கைதானவர்களில் ஈரானியர்கள் நால்வரும் அடங்குவர். அந்த ஈரானியர்கள் 29லிருந்து 46 வயதுக்கு உட்பட்டவர்கள். கைதான ஐந்தாவது நபரின் வயது, அடையாளத்தைத் தெரிந்துகொள்ள நடவடிக்கை எடுக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்தது.

ஐவரும் சுவின்டன், மேற்கு லண்டன், ஸ்டோக்போர்ட், ரோஷ்டேல் ஆகிய பகுதிகளில் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள் தாக்கத் திட்டமிட்டதாகக் கூறப்படும் இடத்துக்குத் தகவல் தரப்பட்டுள்ளதாகவும் காவல்துறை அதற்கு உதவிருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட இடம் எது என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

மேலும் முன்று ஆடவர்கள் சனிக்கிழமையன்று லண்டனில் கைது செய்யப்பட்டனர். வேறொரு பயங்கரவாத் தடுப்பு காவல்துறை விசாரணையின் ஓர் அங்கமாக அவர்கள் கைது செய்யப்பட்டனர். கைதான மூவரும் ஈரானைச் சேர்ந்தவர்கள்.

இரு நடவடிக்கைகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை அல்ல என்று காவல்துறை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்