தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எஃகு வரி அதிகரிப்புக்குப் பதில் நடவடிக்கை: ஐரோப்பிய ஒன்றியம் மிரட்டல்

2 mins read
68a751bb-dc6c-4749-aedd-a0b007871a3d
‘யுஎஸ் ஸ்டீல்’ நிறுவனத்துக்கு நேரில் சென்ற அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (இடமிருந்து இரண்டாவது). - படம்: ஏஎஃப்பி

பிரசல்ஸ்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், அந்நாடு இறக்குமதி செய்யும் எஃகு, அலுமினியப் பொருள்களின் வரிகளை இரட்டிப்பாக்கத் திட்டமிட்டுள்ளார்.

அந்நடவடிக்கைக்குத் தாங்கள் பதிலடி தரக்கூடும் என்று ஐரோப்பிய ஒன்றியம் சனிக்கிழமை (மே 31) மிரட்டல் விடுத்தது. இதனைத் தொடர்ந்து உலகின் ஆக சக்திவாய்ந்த பொருளியல்களில் இரண்டுக்கும் இடையே வர்த்தகப் பூசல் தலைதூக்கும் அபாயம் எழுந்துள்ளது.

இறக்குமதியாகும் எஃகு, அலுமினியம் மீதான 25 விழுக்காடு வரியை 50 விழுக்காடாக உயர்த்தப்போவதாக திரு டிரம்ப் வெள்ளிக்கிழமை (மே 30) அறிவித்திருந்தார். அதற்கு சில மணிநேரத்துக்கு முன்புதான் சீனா, அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை மீறியது என திரு டிரம்ப் குற்றஞ்சாட்டினார்.

உலகளவில் அவர் தொடரும் ‘வர்த்தகப் போர்’ மோசமடைந்து வருகிறது.

வரியை உயர்த்தும் திரு டிரம்ப்பின் திட்டத்தை எண்ணித் தாங்கள் மிகவும் வருந்துவதாக ஐரோப்பியக் குழுமம் தெரிவித்துள்ளது. பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண எடுக்கப்படும் முயற்சிகளுக்கு அவரது திட்டம் இடையூறு விளைவிப்பதாக குழுமம் குறிப்பிட்டது.

“அம்முடிவு உலகப் பொருளியலை மேலும் நிலையற்று இருக்கச் செய்வதுடன் அட்லான்டிக் வட்டாரத்தின் இரு பக்கங்களிலும் (ஐரோப்பா, அமெரிக்கா) வாடிக்கையாளர்களுக்கும் வர்த்தகங்களுக்கும் விலைகளை அதிகரிக்கும்,” எனறு ஐரோப்பியக் குழுமத்தின் பேச்சாளர் ஒருவர் சொன்னார். ஐரோப்பிய ஒன்றியம் பதில் நடவடிக்கை எடுப்பதற்குத் தயாராய் இருப்பதாகவும் அவர் சுட்டினார்.

பேச்சுவார்த்தையைத் தொடர இப்போதைக்குப் பதில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் அந்தப் பேச்சாளர் தெரிவித்தார்.

நிப்போன் ஸ்டீல், யுஎஸ் ஸ்டீல் (Nippon Steel, US Steel) நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பந்தம் குறித்து பிட்ஸ்பர்க் நகருக்கு அருகே பேசும்போது திரு டிரம்ப் வரி அதிகரிப்புத் திட்டம் குறித்து விவரித்தார். 14.9 பில்லியன் டாலர் (19.21 பில்லியன் வெள்ளி) மதிப்பிலான அந்த ஒப்பந்தம், அமெரிக்காவில் பணிபுரியும் எஃகு ஊழியர்கள் தங்கள் வேலைகளைத் தக்கவைத்துக்கொள்ள உதவும் என்றார் அவர்.

வரி அதிகரிப்பு அலுமினியப் பொருள்களுக்கும் பொருந்தும் என்று அவர் பின்னர் சமூக ஊடகத்தில் பதிவிட்டார். வரி அதிகரிப்பு இம்மாதம் நான்காம் தேதி நடப்புக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்