இயற்கைப் பாதுகாப்புக்குத் தனியார் நிதியில் கவனம் செலுத்தும் நாடுகள்

2 mins read
a6337aa9-2070-4ade-a4fb-933375cebb3b
கொலம்பியாவில் நடைபெற்ற காப்16 உச்சநிலை மாநாடு நவம்பர் 1ஆம் தேதி நிறைவுபெற்றது. - படம்: ராய்ட்டர்ஸ்

கொலம்பியா: உலகெங்கும் இயற்கையைப் பாதுகாப்பதற்கான நிதியில் நிலவும் பற்றாக்குறையை நிரப்ப பணக்கார நாடுகள் தனியார் நிதியில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன.

கொலம்பியாவில் இரண்டு வாரம் நடைபெற்ற ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் (ஐநா) COP16 பல்லுயிரினக் கருத்தரங்கில் அதுகுறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

பணக்கார நாடுகள் இயற்கைப் பாதுகாப்புக்கு நிதி ஒதுக்குவது தொடர்பில் உச்சவரம்பை எட்டிவிட்டதாகக் கருதுவதை இது காட்டுவதாகக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

கருத்தரங்கில் நடைபெற்ற கலந்துரையாடல்களில் 2030க்குள் ஆண்டுக்கு $200 பில்லியன் நிதியை இயற்கைப் பாதுகாப்புக்கு எவ்வாறு திரட்டுவது என்பது குறித்துத் திட்டவட்டமாக முடிவெடுக்கப்படவில்லை. இதில் $30 பில்லியனை பணக்கார நாடுகள் தரும் எனக் கூறப்பட்டது.

ஈராண்டுகளுக்குமுன்  குன்மிங்-மாண்ட்ரியோல் உலகளாவிய பல்லுயிர்ச்சூழல் கட்டுப்பாட்டு உடன்படிக்கையின்கீழ் இதன் தொடர்பில் இணக்கம் காணப்பட்டது நினைவுகூரத்தக்கது.

இவ்வாறு திரட்டப்படும் நிதி, நீடித்த நிலைத்தன்மை மிக்க வேளாண்மை, வனவிலங்குக் காப்பகங்களின் சுற்றுக்காவல் போன்ற இயற்கைப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும்.

கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 1) உச்சநிலை மாநாடு முடிவடையும்வரை இந்த நிதியைத் திரட்டுவது தொடர்பில் இணக்கம் காணப்படவில்லை.

வேளாண்மை, சுரங்கத் தொழில், நகர்ப்புற மேம்பாடு போன்ற நடவடிக்கைகளால் இயற்கை மேன்மேலும் நெருக்குதலுக்கு உள்ளாகிறது. இதனால் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் தாவர, விலங்கு இனங்கள் முற்றிலும் அழியக்கூடிய அபாயத்தை எதிர்கொள்வதாகத் தகவல்கள் கூறுகின்றன.

படிம எரிபொருள் பயன்பாட்டால் ஏற்படும் பருவநிலை மாற்றமும் நிலைமையை மோசமாக்குகிறது.

கொலம்பியாவில் நடந்து முடிந்த COP16 மாநாட்டில் பணக்கார நாடுகள் அதிக நிதி வழங்க விருப்பமில்லை என்பதைக் கோடிகாட்டின.

ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் சென்ற ஆண்டே வெளிநாட்டு உதவி நிதியைக் குறைத்த நிலையில் ஃபிரான்சும் பிரிட்டனும் அதைப் பின்பற்றவிருக்கின்றன.

அந்த மாநாட்டில் பேசிய ஐநா தலைமைச் செயலாளர் அண்டோனியோ குட்டரஸ், இயற்கைப் பாதுகாப்பு நிதிக்கு நாடுகள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஆனால் அதற்கு எந்த நாடும் சரியாகப் பதிலளிக்கவில்லை. மொத்தம் $163 மில்லியனை அந்த நிதிக்கு வழங்குவதாக மட்டுமே அவை உறுதியளித்தன. அதன்மூலம் மொத்தம் $400 மில்லியன் நிதி கிடைக்கும் என்றபோதும் 2030ஆம் ஆண்டுக்குள் $30 பில்லியன் என்ற இலக்கைவிட அது மிகவும் குறைவு.

இந்நிலையில் உலக நாடுகள் அடுத்த வாரம் அசர்பைஜானில் COP29 பருவநிலை உச்ச மாநாட்டில் சந்திக்கவிருக்கின்றன. அந்த மாநாட்டிலும் பருவநிலை தொடர்பான செலவிற்குப் பணக்கார நாடுகள் ஏழை நாடுகளுக்கு உதவி செய்ய நிதி வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்