தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கொவிட்-19: முதன்முதலில் தகவல் அளித்தவருக்குக் கூடுதல் சிறைத் தண்டனை

2 mins read
ae33c4e8-4381-4d0d-b909-843dd98b6c81
கொவிட்-19 கிருமிப் பரவலின் ஆரம்பகட்டத்தில் கூட்டம் அலைமோதிய மருத்துவமனைககள், வெறிச்சோடிக் கிடந்த சாலைகள் ஆகியவை தொடர்பான செய்திகள், காணொளிகள் ஆகியவற்றை திருவாட்டி சாங் சான் வெளியிட்டார். - படம்: ராய்ட்டர்ஸ்

பெய்ஜிங்: கொவிட்-19 கிருமியின் ஆரம்பகட்ட பரவலை ஆவணப்படுத்திய சீனச் செய்தியாளருக்குக் கூடுதலாக நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ‘ரிப்போட்டர்ஸ் விதாவுட் பார்டர்ஸ்’ (ஆர்எஸ்எஃப்) அமைப்பு தெரிவித்துள்ளது.

42 வயது சாங் சானுக்கு ஏற்கெனவே நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

சீனாவில் தூண்டுதல் வேலைகளில் ஈடுபட்டு பிறரை வம்புக்கு இழுத்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

வூஹான் நகரில் கொவிட்-19 கிருமித்தொற்று முதன்முதலில் தலைதூக்கியபோது அதுகுறித்து செய்திகளை திருவாட்டி சாங் பதிவிட்டதை அடுத்து, 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

திருவாட்டி சாங்கிற்குத் தற்போது கூடுதல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது குறித்து சீன வெளியுறவு அமைச்சு உடனடியாகக் கருத்து தெரிவிக்கவில்லை.

பாதிக்கப்பட்ட செய்தியாளரை வழக்கறிஞர்கள் பிரதிநிதித்தார்களா என்பது குறித்தும் தெரியவில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியது.

முக்கியமான தகவலை வெளியிட்ட செய்தியாளர் என்று திருவாட்டி சாங் கொண்டாடப்பட வேண்டும் என்றும் அதற்கு மாறாக அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்றும் ஆர்எஸ்எஃப் ஆசியா பசிபிக்கின் சட்டப் பிரிவு நிர்வாகி அலெக்சாண்டிரா பியேலாகாவ்ஸ்கா தமது அறிக்கையில் தெரிவித்தார்.

“திருவாட்டி சாங் அனுபவித்து வரும் கடுந்துயர் முடிவுக்கு வர வேண்டும். அவரை உடனடியாக விடுவிக்கக் கோரி சீனாவுக்கு அனைத்துலக அரசதந்திரச் சமூகம் நெருக்குதல் தர வேண்டும்,” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கொவிட்-19 கிருமிப் பரவலின் ஆரம்பகட்டத்தில் கூட்டம் அலைமோதிய மருத்துவமனைககள், வெறிச்சோடிக் கிடந்த சாலைகள் ஆகியவை தொடர்பான செய்திகள், காணொளிகள் ஆகியவற்றை திருவாட்டி சாங் வெளியிட்டார். இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டதை அடுத்து, திருவாட்டி சாங் கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடுவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

காவல்துறையினர் அவரது கைகளைக் கட்டி அவருக்குக் குழாய் வழியாகப் பலவந்தமாக உணவு ஊட்டியதாகத் திருவாட்டி சாங்கின் அப்போதைய வழக்கறிஞர்கள் தெரிவித்திருந்தனர்.

2024ஆம் ஆண்டு மே மாதத்தில் திருவாட்டி சாங் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால், மூன்று மாதங்கள் கழித்து அவர் மீண்டும் தடுத்து வைக்கப்பட்டார்.

பிறகு அதிகாரபூர்வமாகக் கைது செய்யப்பட்ட திருவாட்டி சாங், ஷாங்காயில் உள்ள பூடோங் தடுப்புக் காவல் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டதாக ஆர்எஸ்எஃப் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்