ஜெனிவா: உலகச் சுகாதார நிறுவனம் சீனாவிடம் கொவிட்-19 தொடர்பாகத் தரவுகளைக் கேட்டுள்ளது.
கொவிட்-19 எப்படித் தொடங்கியது என்பதை சீனா தங்களுடன் பகிர வேண்டும் என்று அது மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் கொவிட்-19 கிருமித்தொற்று சீனாவின் வூஹானில் உள்ள ஒரு சந்தையில் தொடங்கியது.
2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி தொடங்கிய அந்தக் கிருமித்தொற்று உலகில் பல மில்லியன் மக்களைக் கொன்றது, உலகப் பொருளியலை ஆட்டம் காணவைத்தது, சுகாதாரக் கட்டமைப்பை முடக்கியது.
கிருமி குறித்த புரிதலைத் தெளிவாக தெரிந்துகொள்ள சீனாவின் தரவுகள் மிக முக்கியமானது என்றது உலகச் சுகாதார நிறுவனம்.
வெளிப்படைத்தன்மை, பகிர்வு, ஒற்றுமை ஆகியவற்றை உலக நாடுகள் பின்பற்ற வேண்டும், இல்லை என்றால் எதிர்காலத்தில் வரும் கொள்ளை நோய்களைச் சமாளிப்பதில் சிரமம் ஏற்படும் என்று அது கூறியது.

