தோக்கியோ: ஜப்பான் தனது ராணுவ பலத்தை முதன்மைப்படுத்தி அதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த முற்படும் ‘புதிய ராணுவவாதத்தை’ (new militarism) கையாள்வதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை அந்நாடு மறுத்துள்ளது.
சிங்கப்பூரில் நடைபெற்றுவரும் 23-வது ஷங்ரிலா கருத்தரங்கில் உரையாற்றிய ஜப்பானின் தற்காப்பு அமைச்சர் ஷின்ஜிரோ கொய்சுமி, ஞாயிற்றுக்கிழமை (மே 31) அந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார்.
அத்துடன், சீனா போதிய வெளிப்படைத்தன்மையின்றித் தனது ராணுவத்தைத் துரிதமாக விரிவுபடுத்துவதாக அவர் அந்நாட்டைக் கடுமையாக விமர்சித்தார்.
அண்மையில் தனது தற்காப்புச் செலவினத்தை அதிகரித்துவரும் ஜப்பானின் அமைச்சரவை, இதற்கான கூடுதல் நிதி ஒதுக்கியுள்ள செலவினத் திட்டத்திற்குக் கடந்த டிசம்பர் ஒப்புதல் அளித்துள்ளது.
சீனா தனது தற்காப்புச் செலவினங்களைத் தொடர்ந்து உயர்த்தி வருவதாகச் சிங்கப்பூரில் நடைபெறும் ஷங்ரிலா கலந்துரையாடலில் திரு கொய்சுமி கூறினார்.
சீனாவின் வெளியுறவு அணுகுமுறையும் ராணுவ நடவடிக்கைகளும் ஜப்பானுக்கும் அனைத்துலகச் சமூகத்திற்கும் கடுமையான கவலையைத் தருவதாக அவர் கண்டித்தார்.
“சிந்தித்துப் பாருங்கள். ஒரு நாட்டிடம் அணுவாயுதங்களும் உத்திபூர்வ குண்டுவீச்சு விமானங்களும் பெருமளவில் உள்ளன. அத்தகைய ஆயுதங்கள் எதுவும் இல்லாத ஜப்பான் மீது ‘புதிய ராணுவவாதம்’ என்று முத்திரை குத்தப்படுகிறதா?” என்று அவர், சீனாவைச் சூசகமாகக் குறிப்பிட்டுக் கேள்வியெழுப்பினார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய ஜப்பானின் செயல்பாடுகள் பிறர் அறியும்வண்ணம் இருப்பதாகத் திரு கொய்சுமி கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
அனைத்துலகச் சட்டங்களைப் பின்பற்றும் ஜப்பான், ஐக்கிய நாட்டு நிறுவனச் சாசனம் மீது கடப்பாடு கொள்வதுடன் சுதந்திரமான, வெளிப்படையான அனைத்துலக ஒழுங்கை நிலைநிறுத்த முயற்சிகள் மேற்கொண்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆசிய பசிபிக் நாடுகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சு, ஷங்ரிலா மாநாடு தொடங்குவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னதாக எச்சரிக்கை விடுத்தது.
இதற்கு முன்னதாக, ஜப்பானின் ‘புதிய ராணுவவாதத்தின்’ பொறுப்பற்ற நடவடிக்கைகளை ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் என்றும் சீனத் தரப்பு கூறியிருந்தது.
சிங்கப்பூரில் நடைபெறும் இந்தக் கலந்துரையாடலில், சீனாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மேஜர் ஜெனரல் மெங் சியாங்கிங், ஜப்பானைக் குறைகூறினார்.
தைவான் மீது சீனா தாக்குதல் நடத்தினால் ஜப்பானிய ராணுவம் பதிலடி தரலாம் என்று கடந்த நவம்பர் மாதத்தில் ஜப்பானியப் பிரதமர் சானே தக்காய்ச்சி எச்சரித்தார்.
அதனைத் தொடர்ந்து ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு பல்லாண்டுகளில் இல்லாத மோசமான நிலைக்குச் சரிந்தது.

