கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்காக அம்னோ கட்சி இதுவரை 1 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான தொகையைத் திரட்டியுள்ளது.
வீட்டுக் காவலில் இருந்தவாறு எஞ்சிய தண்டனைக் காலத்தை நிறைவேற்றத் திரு நஜிப் 50 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தவேண்டும் என்று கூட்டரசுப் பிரதேசங்களின் மன்னிப்பு வாரியம் இதற்குமுன் தெரிவித்திருந்தது.
அந்தத் தொகையைப் பெற்றுத்தர அம்னோ கட்சி, அதன் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் எனப் பலத் தரப்பினரிடமிருந்து நிதி திரட்டுகிறது.
50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தைச் செலுத்த ஆதரவாளர்கள் பலர் முன்வந்து நிதி வழங்குவதைக் கேட்டுத் திரு நஜிப் நெகிழ்ச்சியடைந்ததாக அவரது மகள் நூர்யானா நஜ்வா தெரிவித்தார்.
“இத்தனை பேர் மனமுவந்து நிதியளிப்பர் என்று என் தந்தை எதிர்பார்க்கவில்லை,” என்றார் அம்னோ கட்சியின் இளம் பெண்கள் பிரிவின் தலைவரான நூர்யானா.
சிங்கப்பூர், புருணை, இத்தாலி, கனடா ஆகிய நாடுகளிலிருந்தும் ஆதரவாளர்கள் தம்மைத் தொடர்புகொண்டு நிதியளிக்க விரும்புவதாகக் கூறினர் என்றார் திரு நஜிப்பின் மனைவி ரோஸ்மா மன்சூர்.
திரு நஜிப்பின் குடும்பத்தினர் ஆதரவாளர்களுக்கு நன்றிகூறி வரும் வேளையில், நிதித் திரட்டு குறித்து இணையத்தளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
நிதித் திரட்டுக்காக அம்னோ அதன் வங்கிக் கணக்கு விவரங்களை விநியோகம் செய்துவந்த நிலையில், விமர்சகர்கள் நஜிப்பை அவமதிக்க அதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தியுள்ளனர்.
திரு நஜிப்பின் நிதிக்கு ஒரு காசு அல்லது ஐந்து காசு மட்டும் செலுத்தப்பட்ட புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவின.
பணம் அனுப்புவோர் குறுஞ்செய்தியைப் பரிவர்த்தனையுடன் சேர்த்து பெறுநருக்கு அனுப்ப முடியும். விமர்சகர்கள் அதைப் பயன்படுத்தி திரு நஜிப்பிற்கு எதிராக அவதூறான கருத்துகளைப் பதிவிட்டனர்.
