பாத்தாம்: இவ்வாண்டு ஜனவரி 13ஆம் தேதி இந்தோனீசியாவின் பாத்தாமில் உள்ள ஒரு பண்ணையிலிருந்து பல முதலைகள் தப்பித்தன.
அதனைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் தேசிய பூங்காக் கழகம் கவனம் செலுத்தி வருகிறது.
இந்தோனீசியாவில் மூன்று நாள்களாக தொடர்ந்து பெய்த மழையால் அங்குள்ள முதலைப் பண்ணையைச் சுற்றி போடப்பட்ட வேலியின் சில பகுதிகள் சேதமுற்றன. இது முதலைகள் அங்கிருந்து தப்பிக்கக் காரணமாக இருந்ததாக அந்நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தப் பண்ணை இந்தோனீசியாவின் பூலான் தீவில் உள்ளது. அது சிங்கப்பூரின் செந்தோசா தீவிலிருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முதலைகளை யாரேனும் பார்க்க நேர்ந்தால் உடனடியாக அதுபற்றி தேசிய பூங்காக் கழகத்துக்குத் தகவல் தெரிவிக்கும்படி சனிக்கிழமையன்று (ஜனவரி 18) கழகக் குழுமத் தலைவரான ஹாவ் சூன் பெங் கேட்டுக்கொண்டுள்ளார்.
எத்தனை முதலைகள் தப்பித்தன என்பது தெரியவில்லை. எனினும், இதுவரை குறைந்தது 23 முதலைகள் பிடிபட்டுவிட்டதாக சிஎன்என் இந்தோனீசியா ஊடகம் தெரிவித்துள்ளது. அந்த முதலைகள் யாவும் கடல்நீர் முதலைகள் என்று கூறப்படுகிறது.