கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வு: நெருக்குதலில் ஆசிய நாடுகள்

கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வு: நெருக்குதலில் ஆசிய நாடுகள்

2 mins read
faea22ad-2720-40d4-89ef-71f5a0491ee3
எண்ணெய்த் தேவையில் 90 விழுக்காட்டை மத்திய கிழக்கிலிருந்து தருவிக்கும் பிலிப்பீன்ஸ், மார்ச் 24ஆம் தேதி தேசிய அவசரநிலையை அறிவித்தது. - படம்: ஏஎஃப்பி

துபாய்: பாரசீக வளைகுடாவிலிருந்து எரிசக்தி விநியோகத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதால், ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள ஆசிய நாடுகள், தற்போது மற்றொரு பெரும் பொருளியல் சவாலை எதிர்கொண்டுள்ளன.

ஒருபுறம் கச்சா எண்ணெய் விலை உயர்வதும் மறுபுறம் அமெரிக்க டாலரின் மதிப்பு கூடிவருவதும் ஆசிய நாடுகளின் நாணய மதிப்பை நிலைகுலையச் செய்துள்ளன.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால், உலகின் முக்கியமான கடல்வழிப் பாதைகளில் ஒன்றாகக் கருதப்படும் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் எண்ணெய், எரிவாயு விநியோகம் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. இப்பாதை வழியாகச் செல்லும் எரிசக்தியில் ஐந்தில் நான்கு பங்கு ஆசிய நாடுகளுக்குச் செல்கிறது.

மத்திய கிழக்கு மோதல், மற்றொரு கடுமையான பொருளியல் சிக்கலையும் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. அனைத்துலக வர்த்தகத்தில் 90 விழுக்காட்டுப் பரிவர்த்தனைகள், அமெரிக்க டாலரில் நடைபெறுகின்றன. இவற்றில், தற்போது விண்ணைத் தொட்டுள்ள கச்சா எண்ணெய் விலையும் எரிவாயு வர்த்தகமும் அடங்கும்.

பதற்றமான சூழல் நிலவும்போது, முதலீட்டாளர்கள் அபாயம் நிறைந்த சந்தைகளிலிருந்து தங்கள் முதலீடுகளைத் திரும்பப் பெற்று, பாதுகாப்பான புகலிடமாகக் கருதப்படும் அமெரிக்கச் சொத்துகளில் முதலீடு செய்வது வழக்கம். இதன் காரணமாக அமெரிக்க டாலரின் மதிப்பு கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஆசிய நாணயங்களுக்கு எதிராக உச்சத்தை எட்டியுள்ளது.

கச்சா எண்ணெய் விலை ஏற்றம்

ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்காவும் ஈரானும் கூறும் கருத்துகள் முரண்படும் வேளையில், அனைத்துலகச் எரிசக்திச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை வியாழக்கிழமை (மார்ச் 26) மீண்டும் அதிகரித்தது.

இந்தப் போரால், உலகின் மிக முக்கியமான எண்ணெய் வழித்தடமான ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் உற்பத்தி பேரளவில் பாதிக்கப்பட்டு, உலகளவில் எரிசக்திக்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

சிங்கப்பூர் நேரப்படி காலை மணி 8.27 நிலவரப்படி, அனைத்துலக அளவுகோலான பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 1.1 விழுக்காடு உயர்ந்து, பீப்பாய்க்கு US$103.33 என விற்பனையானது. புதன்கிழமை இதன் விலை 2 விழுக்காட்டிற்குமேல் சரிந்திருந்தது.

அமெரிக்க அளவுகோலான வெஸ்ட் டெக்சஸ் இன்டர்மீடியட் விலை 1.2 விழுக்காடு உயர்ந்து, பீப்பாய்க்கு US$91.38ஆக உயர்ந்தது.

தற்போதைய விலையுயர்வின் அடிப்படையில் பிரென்ட் எண்ணெய் விலை, 1990க்குப் பிறகு ஒரே மாதத்தில் காணும் மிகப்பெரிய உயர்வை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. ஈரான் விவகாரத்தில் தெளிவான முடிவு எட்டப்படாத வரை, எண்ணெய் விலையில் இத்தகைய ஏற்ற இறக்கம் தொடரும் எனப் பொருளியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்