‘கியூபாவின் அதிபராக அமெரிக்க வெளியுறவு அமைச்சர்’: டிரம்ப்

1 mins read
38f6f4f9-5846-43d3-84aa-ea341ab2aee9
கியூபாவைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, கியூபாவின் அடுத்த அதிபராவார் என்ற சமூக ஊடகப் பதிவை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் பகிர்ந்துகொண்டார். - படம்: இபிஏ

வா‌ஷிங்டன்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ கியூபாவின் அடுத்த அதிபராவார் என்ற சமூக ஊடகப் பதிவு ஒன்றை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தமது சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார்.

கியூபாவைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்த திரு ரூபியோ, கியூபாவின் அடுத்த அதிபராவார் என்ற பதிவைக் கிலிஃப் ஸ்மித் என்ற ஆடவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

அதே பதிவைத் தமது ட்ருத் சோ‌ஷல் சமூக ஊடகத்தில் பகிர்ந்த திரு டிரம்ப், “அது நல்ல யோசனையாக எனக்குத் தெரிகிறது,” என்று குறிப்பிட்டார்.

கிலிஃப் ஸ்மித்தின் எக்ஸ் தளத்தை 500க்கும் குறைவானோர் பின்பற்றுகின்றனர். அந்த ஆடவர் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த பழைமைவாதி என்று அறியப்படுகிறது.

வெனிசுவேலாவைக் கைப்பற்றி அந்நாட்டு அதிபர் நிக்கலாஸ் மதுரோவை அமெரிக்க சிறைப்பிடித்துச் சென்று ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில் கியூபாவின் அடுத்த அதிபர் திரு ரூபியோ என்ற பதிவைத் திரு டிரம்ப் பகிர்ந்துள்ளார்.

இதற்கிடையே, திரு டிரம்ப்பின் பதிவுக்குக் கியூபாவின் கம்யூனிச அரசாங்கம் நேரடியாகப் பதிலளிக்கவில்லை.

மாறாக, கியூபாவின் வெளியுறவு அமைச்சர் புருனோ ரோட்ரிகஸ், “கியூபாவின் பக்கம் உரிமையும் நியாயமும் உண்டு,” என்றார்.

“அமெரிக்க கியூபாவிலும் அதைச் சுற்றியுள்ள வட்டாரத்திலும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்திலும் கட்டுக்கடங்காத குற்றத் தலைவரைப் போல நடந்துகொண்டு அமைதியையும் பாதுகாப்பையும் அச்சுறுத்துகிறது,” என்று திரு ரோட்ரிகஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

குறிப்புச் சொற்கள்