கொழும்பு: இலங்கையில் காவல்துறையின் சமூக ஊடகக் கணக்குகள் மீது இணையக் குற்றவாளிகள் குறி வைத்திருப்பதாக இந்தியாவின் பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.
அந்தச் சம்பவத்தை இலங்கைக் காவல்துறையின் கண்காணிப்பாளரும் பேச்சாளருமான கே.பி. மனாதுங்க உறுதிசெய்துள்ளார்.
அது பற்றி அவர் கூறுகையில், “காவல்துறையின் யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், டிக்டோக், எக்ஸ் ஆகிய தளங்கள் மீது செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 31) இணையத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளது கவனத்துக்கு வந்துள்ளது.
“இப்போது வரை, யூடியூப் தரவுகள் தவிர்த்து இதர அனைத்துத் தரவுகளையும் மீட்டுவிட்டோம்,” என்றார்.
மேலும், தாக்குதல் நடத்திய இணையக் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் சொன்னார்.
காவல்துறையின் சமூக ஊடகக் கணக்குகள் தவிர, இலங்கை அரசாங்க அச்சுத் துறையின் அதிகாரத்துவ இணையத்தளம் மீதும் இணையத் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
அந்த அச்சுத் துறைதான் அரசாங்கம் தொடர்பான எல்லா அறிவிப்புகளையும் ஆவணங்களையும் வெளியிட்டு வருகிறது.
அதன் மீது தாக்குதல் நடத்திய இணைய ஊடுருவல் குழு எது என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று அரசாங்கத்தின் கணினி அவசரநிலை சமாளிப்புக் குழு (CERT) தெரிவித்து உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“தாக்குதல் நடத்தப்பட்டபோதிலும் இணையத்தளத்தின் தரவுகள் களவுபோகவில்லை. ஊடுருவிகள் சில தரவுகளைத் தேவையின்றி இணைத்துள்ளனர், அவ்வளவுதான்,” என்று குழுவின் பேச்சாளர் நிரோஷன் ஆனந்தா செய்தியாளர்களிடம் கூறினார்.