மலேசியாவைப் பாதித்த சூறாவளி; பல இடங்களில் கடுமையான சேதம்

மலேசியாவைப் பாதித்த சூறாவளி; பல இடங்களில் கடுமையான சேதம்

1 mins read
712a88ac-33ab-4f94-915c-2dca93866959
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மலேசியாவின் கன்கர் நகரம். - படம்: இபிஏ
Google News Preferred Icon

மலாக்கா: மலேசியாவை ‘சென்யார்’ சூறாவளி பதம்பார்த்துள்ளது. கிட்டத்தட்ட 49 மரங்கள் சாய்ந்தன. ஒருவர் மாண்டார்.

வியாழக்கிழமை (நவம்பர் 27) நள்ளிரவு முதல் சூறாவளி மலேசிய மாநிலங்களைக் கடக்கத் தொடங்கியது. இதனால் பல இடங்களில் கனத்த மழையும் வெள்ளமும் ஏற்பட்டது. பலத்த காற்றினால் கட்டடங்களும் பாதிக்கப்பட்டன.

வெள்ளிக்கிழமை அதிகாலை ஜாலான் சிலேந்தர்-மச்சாப் பகுதியில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் விபத்தில் சிக்கி மாண்டார். சூறாவளியால் விழுந்த மரத்தின்மீது மோதி அவர் உயிரிழந்தார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

போர்ட் டிக்சன் பகுதியில் உள்ள பெட்ரோன் டீசல் படகு முனையத்தில் கட்டுமானம் ஒன்று சரிந்தது என்று மலேசிய தீ மற்றும் மீட்புப் பணித் துறை கூறியது.

நெகிரி செம்பிலான் வட்டாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது. ஒரு கட்டுமானம் சரிந்தது. இரண்டு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது.

மலாக்காவில் எட்டு மரங்கள் சாய்ந்தன. சிலாங்கூரில் ஐந்து மரங்கள் சாய்ந்தன. தலைநகர் கோலாலம்பூரில் பெரிய பாதிப்புகள் ஏதும் இல்லை.

“சென்யார் சூறாவளி வலுவிழந்துள்ளது. இருப்பினும், மழை தொடர்ந்து பெய்து வருகிறது. அதனால் நிலச்சரிவு மற்றும் மரம் விழும் சம்பவங்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. அதனால் அதிகாரிகள் தொடர்ந்து விழிப்புநிலையில் உள்ளனர்,” என்று தீ மற்றும் மீட்புப் பணித் துறை கூறியது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர்கள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்