மமோட்சு: இந்தியப் பெருங்கடலில் பிரான்சுக்குச் சொந்தமான மயோட்டே தீவை சக்திவாய்ந்த ‘சிடோ’ புயல் புரட்டியெடுத்துள்ளது. இதில் நூற்றுக்கணக்கானோர் மாண்டிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
மணிக்கு 225 கிலோமீட்டர் வேகத்தில் சீறிய புயல் காரணமாகப் பல குடிசைகள் சேதமடைந்தன.
உயிர் பிழைத்தோரைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பிரான்சிலிருந்தும் பல மீட்புப் பணியாளர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
மின்கம்பங்கள் சாய்ந்ததுடன் கிராமங்களுக்குச் செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் இதன் காரணமாக மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
மயோட்டேயின் 320,000. மக்கள்தொகையில் ஏறத்தாழ 75 விழுக்காட்டினர் ஏற்கெனவே ஏழ்மையில் வாடுகின்றனர். மூன்றில் ஒருவர் வேலையின்றி தவிக்கின்றனர். பிரான்ஸ் வழங்கும் நிதி உதவியை மயோட்டே அதிகம் நம்பியிருக்கிறது.
இந்நிலையில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல மயோட்டேயைச் ‘சிடோ’ புயல் உலுக்கியுள்ளது. சிலர் கடும் உணவு, குடிநீர், தங்குமிடப் பற்றாக்குறையால் அவதியுறுகின்றனர்.
தீவு எந்த அளவுக்குச் சேதமடைந்திருக்கிறது என்பதை ஆய்வு செய்ய பிரெஞ்சு உள்துறை அமைச்சர் அத்தீவுக்கு நேரில் செல்ல இருக்கிறார்.
மயோட்டேவுக்கு அருகில் உள்ள மொஸாம்பிக்கிலும் ‘சிடோ’ புயல் கரையைக் கடந்தது. இதன் விளைவாக அங்கு திடீர் வெள்ளம் ஏற்பட்டதுடன் பல மரங்கள் வேரோடு சாய்ந்தன.

