வெல்லிங்டன்: நியூசிலாந்தின் வானிலை ஆய்வு நிலையம் சூறாவளிக்கான எச்சரிக்கையை விடுத்துள்ளது. நியூசிலாந்தில் சூறாவளி எச்சரிக்கை என்பது மிக அரிதான ஒன்று.
கேன்டர்பரி வட்டாரத்தில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை (அக்டோபர் 23) சூறாவளி காரணமாக அங்குப் பலத்த காற்று மற்றும் கனத்த மழை பெய்யும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
தலைநகர் வெலிங்டன், கிறைஸ்ட்சர்ச், கேன்டர்பரி நகரங்களில் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சில ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. நூலகம் உள்ளிட்ட அரசாங்கம் சார்ந்த அலுவலகங்களும் மூடப்பட்டன.
நியூசிலாந்து போக்குவரத்து அமைப்பு சில சாலைகளை மூடியுள்ளது, மேலும் சில பகுதிகளில் மின்சாரத் தடையும் ஏற்பட்டுள்ளன.
பலத்த காற்று மற்றும் மழை காரணமாகச் சில கூடாரங்கள் சரிந்தன, வேலிகள் கீழே விழுந்தன, கனரக வாகனம் கவிழ்ந்தது, சில சாலைகள் வெள்ளக்காடாக மாறின.


