யங்கூன்: வியட்னாம், லாவோஸ், தாய்லாந்தைப் பாதித்த யாகிப் புயல் மியன்மாரையும் விட்டுவைக்கவில்லை.
அங்கு வீசிய பலத்த புயலாலும் கனத்த மழையாலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதில் 74 பேர் மாண்டுபோயினர் என்றும் 89 பேர் காணவில்லை என்றும் மியன்மார் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
மேலும், அந்நாட்டு ராணுவம் அமைப்புகளிடம் உதவி கோரியுள்ளது. மியன்மார் ராணுவம் அமைப்புகளிடம் உதவி நாடுவது அரிதான ஒன்று.
தற்போது மீட்புப் பணிகளும் தேடுதல் பணிகளும் நடந்து வருவதாக மியன்மார் ராணுவம் தெரிவித்தது.
235,000க்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மலைப் பகுதிகளில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சாலைகளும் பாலங்களும் சேதமடைந்துள்ளன.
தொடர்பு, தகவல் கட்டமைப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளதால் இணையம், தொலைபேசி அழைப்புகள் சில இடங்களில் வேலை செய்யவில்லை.
சிட்டுவாங், பாகோ நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது, நீர் அளவும் அபாயமான கட்டத்தை எட்டியுள்ளது. இருப்பினும், நீரின் அளவு சில நாள்களுக்குள் குறைந்துவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
யாகிப் புயலால் தென்கிழக்காசிய நாடுகளில் 350க்கும் அதிகமானவர்கள் மாண்டனர்.