தென்கிழக்காசியாவில் பெருவளர்ச்சி கண்டுவரும் தரவு நிலையங்கள்

தென்கிழக்காசியாவில் பெருவளர்ச்சி கண்டுவரும் தரவு நிலையங்கள்

2 mins read
b0b19e31-300d-481a-b7b0-7c0c7af9aa44
மேற்கு ஜாவாவின் கரவாங் நகரில் உள்ள மைக்ரோசாஃப்ட் தரவு நிலையம். - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

கராவாங்: இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவுக்கு அருகே உள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தரவு நிலையமொன்று சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது.

தென்கிழக்காசியாவில் வேகமாக வளர்ந்துவரும் தொழில்நுட்பக் கட்டமைப்பின் ஒரு பகுதியாக அது அமைந்துள்ளது. பொருளியல் வாய்ப்புகளை வழங்கினாலும் அதற்கு அதிக வளங்கள் தேவைப்படுகின்றன.

செயற்கை நுண்ணறிவுக்கான தேவை கூடிவரும் நிலையில், தொழில்நுட்ப நிறுவனங்கள் அந்த வட்டாரத்தில் பில்லியன் கணக்கான டாலரை முதலீடு செய்யப் போட்டிபோடுகின்றன.

உலகெங்கும் புதிய தரவு நிலையங்கள் அதிக எண்ணிக்கையில் நிறுவப்படுகின்றன. அவற்றின் வளர்ச்சி, ஆசியாவில் மிக வேகமாக உள்ளது.

தென்கிழக்காசியாவில் இயங்கும் தரவு நிலையங்களின் ஆற்றல், 2025ஆம் ஆண்டைக் காட்டிலும் 2030ல் மும்மடங்காகும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. கேபிஎம்ஜி நிறுவனத்தின் அறிக்கை அந்தத் தகவலை வெளியிட்டது.

“ஒவ்வொரு செயலியும் ஒவ்வொரு பணியும் ஒவ்வொரு பயனீட்டாளரும் அடுத்த சில ஆண்டுகளில் அவர்களுடைய வேலையின் சில கட்டங்களில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவர் என்று எதிர்பார்க்கின்றோம்,” என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் உள்ள உள்கட்டமைப்பு மேலாளர் அலிஸ்டர் ஸ்பியர்ஸ் தெரிவித்தார்.

ஆயினும் ஆசியாவில் உள்ள தரவு நிலையங்களில் ஏராளமானவை, பூமியை வெப்பமாக்கும் படிம எரிபொருள்களை நம்பியிருக்கும் மின்சாரக் கட்டமைப்புகளுக்குக் கூடுதல் சுமையை ஏற்படுத்தும். அத்துடன் கணினிக் கட்டமைப்பின் சேவையகங்கள் மேலும் வெப்பமடைவதைத் தடுக்க உள்நாட்டின் நீர் வளங்களை அவை அதிக அளவில் பயன்படுத்தும் சூழ்நிலையும் உள்ளது.

சிங்கப்பூர் நீண்டகாலத்திற்குத் தென்கிழக்காசியாவின் தரவு நிலைய நடுவமாக இருந்துவந்தது. ஆனால் 2019ஆம் ஆண்டுக்கும் 2022க்கும் இடையில் தரவு நிலையத் துறையின் வளர்ச்சியை அது சற்று நிறுத்திவைத்தது. எரிசக்தி, நீர், நிலப் பயன்பாடு குறித்த அக்கறைகள் அதற்குக் காரணங்களாகச் சொல்லப்பட்டன.

அத்துடன் செயற்கை நுண்ணறிவுத் துறையின் அதிவேக வளர்ச்சியும் பக்கத்து நாடுகளான மலேசியா, இந்தோனீசியா, தாய்லாந்து, பிலிப்பீன்ஸ், வியட்னாம் முதலியவற்றில் தரவு நிலையங்கள் பெருகக் காரணமாகக் கூறப்பட்டது.

தரவு நிலையங்களின் விரிவாக்கம் மின் கட்டமைப்புகளில் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. அவை அதிக அளவில் நிலக்கரியைச் சார்ந்திருக்கின்றன.

இந்தோனீசியாவில் இயங்கும் தரவு நிலையங்கள் பயன்படுத்தும் மின்சாரம் 2030ல் நான்கு மடங்காகக்கூடும் என்று எரிசக்தி ஆய்வு நிறுவனமான எம்பெர் கணித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்