பேங்காக்: தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவாத்தின் மகள் தமது தந்தைக்கு அரச மன்னிப்பைக் கோரும் எந்தவோர் ஆவணத்தையும் இன்னும் பார்க்கவில்லை என்று கூறியிருக்கிறார்.
அத்தகைய செயல்முறைக்கு நேரம் எடுக்கும் என்றும் அது தமது தந்தையின் விருப்பம் என்றும் அவர் சொன்னார்.
புதிய அரசாங்கத்தை வழிநடத்தவிருக்கும் பியூ தாய் கட்சியின் மூத்த உறுப்பினரான திருவாட்டி பெட்டோங்டார்ன் ஷினவாத் தமது தந்தைக்கு மன்னிப்பு வழங்குவதற்கான கோரிக்கை விடுக்கப்படுமா என்பதைத் தெளிவாக உறுதிசெய்யவில்லை.
நாடு கடந்து வாழ்ந்த திரு தக்சின் சென்ற வாரம் தாய்லாந்து திரும்பினார். அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது உள்ளிட்ட குற்றங்களுக்காக அவருக்கு எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
திரு தக்சின் தற்போது மருத்துவமனையில் இருக்கிறார். தமது தந்தையின் இதயப் பிரச்சனை குறித்து தாம் கவலைப்படுவதாகத் திருவாட்டி பெட்டோங்டார்ன் செய்தியாளர்களிடம் கூறினார்.

