சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள், மலேசியாவிற்குள் நுழைய ‘விஇபி’ எனும் வாகன அனுமதி அட்டையைப் பெற வேண்டும். சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களை வைத்திருக்கும் மலேசியர்களுக்கும் இது பொருந்தும்.
இதற்கான கடைசி தேதி அக்டோபர் 1. அன்றுதான் ‘விஇபி’ அமுலுக்கு வருகிறது.
இந்த நிலையில் காலக்கெடுவுக்குள் ‘விஇபி’ அட்டையைப் பெற பலர் போராடி வருகின்றனர்.
‘விஇபி’ அட்டையைப் பெறுவதில் சிரமத்தை எதிர்நோக்குவோர், அமலாக்க தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஜோகூர் பாருவிலும் சிங்கப்பூரிலும் உள்ள ‘விஇபி’ நிலையங்களில் பலர் காலை 7.00 மணியிலிருந்தே வரிசைப்பிடித்து நின்று விடுகின்றனர்.
சிங்கப்பூரில் உணவுக்கடை நடத்தும் மலேசியரான ஷரிஃபுடின் முஹமட் தின், 56, விஇபி பற்றிய தனது கவலையைப் பகிர்ந்துகொண்டார்.
இவர், சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட வாகனத்தை வைத்திருக்கிறார்.
“அக்டோபர் 1ஆம் தேதிக்குள் ‘விஇபி’யைப் பெற முடியாமல் போனால் பேருந்தில் பயணம் செய்வேன்,” என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“ஒரு மாதத்திற்கு முன்பே விஇபிக்கு விண்ணப்பிக்க முயற்சி செய்தேன். இதனை உறுதிப்படுத்தும் மின் அஞ்சல் இன்னமும் கிடைக்கவில்லை,” என்றார் அவர்.
“விடியற்காலை 3.00 மணிக்கு என்னுடைய கடையைத் திறக்க வேண்டியிருப்பதால் காலை 2.00 மணிக்கு ஜோகூரிலிருந்து புறப்படுகிறேன். விஇபிக்கான விண்ணப்பம் வெற்றிகரமாக அமையவில்லையென்றால் எனக்குள்ள ஒரே வழி பேருந்தில் பயணம் செய்வதுதான்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
சிங்கப்பூரரான ஓய்வுபெற்ற அட்னான் ஹுஸிர், 62, பலமுறை இணையத்தில் விண்ணப்பிக்க முயற்சி செய்து தோல்வியடைந்ததால் ஜோகூரின் டங்கா பேயில் உள்ள ‘விஇபி’ நிலையத்துக்குச் செல்ல முடிவு செய்தார்.
காலை ஒன்பது மணிக்கு அந்த நிலையத்துக்கு வந்ததாகவும் அப்போது அங்கு 100 பேருக்கு மேல் காத்திருந்ததாகவும் அவர் கூறினார்.
“ஏழு மணி நேரமாகியும் காத்திருந்தேன். ஒரு விண்ணப்பதாரர் காலை 4.00 மணிக்கே வந்துவிட்டதாகக் கூறினார். எனக்குப் பிறகு குறைந்தது 100 பேர் வரிசையில் காத்திருந்தனர். ஒரு சிலர் நாளை வருவதாகக் கூறி சென்றுவிட்டனர்,” என்றார் அவர்.
மலேசிய அரசாங்கம் திட்டத்தை ஒத்திவைத்து விண்ணப்ப நடைமுறைகளை முதலில் முடிக்க ஏற்பாடு செய்யும் என்று தாம் நம்புவதாக அட்னான் ஹுஸிர் சொன்னார்.