இஸ்ரேலியத் தேர்தலில் இழுபறி; நெட்டன்யாகுவுக்குப் பின்னடைவு

இஸ்ரேலியத் தேர்தலில் இழுபறி; நெட்டன்யாகுவுக்குப் பின்னடைவு

படம்: ராய்ட்டர்ஸ்

28 Oct 2026 - 10:38 am

2 mins read

ஜெருசலம்: இஸ்ரேலில் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 27) நடைபெற்ற தேர்தலில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாகக் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் கூட்டணிக்கும், காடி ஐசென்கோட் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான தெளிவான ஆதரவு கிடைக்கவில்லை.

இந்தத் தேர்தல் முடிவுகள் நெட்டன்யாகுவின் கூட்டணிக்கு ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது. இருப்பினும், கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் வரை, நீண்டகாலம் பிரதமராக இருக்கும் நெட்டன்யாகு இடைக்காலப் பிரதமராகப் பதவியில் நீடிக்க இது வாய்ப்பளிக்கும்.

மொத்தம் 120 இடங்களைக் கொண்ட இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற 61 இடங்கள் தேவை. ஆனால், எந்தத் தரப்பிற்கும் அந்த எண்ணிக்கை கிடைக்கவில்லை. இஸ்ரேலிய ஊடகங்களான கான் 11, சேனல் 13 ஆகியவை, இரு கூட்டணிகளும் சமநிலையில் இருப்பதைக் காட்டின. நெட்டன்யாகுவின் கூட்டணி, ஐசென்கோட்டைவிடச் சிறிது முன்னிலை வகிப்பதாக சேனல் 12 ஊடகம் தெரிவித்துள்ளது.

நெட்டன்யாகுவின் கூட்டணியில், இடாமர் பென்-க்விர், பெசலெல் ஸ்மோட்ரிச் தலைமையிலான தீவிர வலதுசாரி சமயக் கட்சிகள் இணைந்து 13 இடங்களைக் கைப்பற்றும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இவ்விரு கூட்டணிகளுக்கு வெளியே உள்ள அரபுக் கட்சிகள் ஆட்சி அதிகாரத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுக்கக்கூடும். ஆனால், யாஷார் கட்சியின் தலைவரான ஐசென்கோட், அவர்களுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பதை முற்றிலும் நிராகரித்துள்ளார்.

தேர்தலில் 77.7 விழுக்காட்டு வாக்குகள் பதிவாகின. இது கடந்த 20 ஆண்டுகளில் ஆக அதிக வாக்குப் பதிவாகும். 2022 தேர்தலைவிட இது 7 விழுக்காடு அதிகம். இறுதி முடிவுகள் வெளியாகச் சில நாள்கள் ஆகலாம். சிறு கட்சிகளே கூட்டணி முடிவைத் தீர்மானிக்கும். எந்தத் தரப்பாலும் ஆட்சி அமைக்க முடியாவிட்டால் மீண்டும் தேர்தல் நடத்தப்படலாம்.

2023 அக்டோபர் 7ல் மேற்கொள்ளப்பட்ட ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு நடைபெற்ற முதல் தேர்தல் இதுவாகும். முன்னாள் ராணுவத் தலைவரான ஐசென்கோட், 66, நெட்டன்யாகுவுக்குக் கடுமையான சவாலாக உருவெடுத்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்