நேப்பாள வெள்ளத்தில் காணாமற்போன மலேசியர்களுக்கு இறப்புச் சான்றிதழ்

நேப்பாள வெள்ளத்தில் காணாமற்போன மலேசியர்களுக்கு இறப்புச் சான்றிதழ்

கோப்புப் படம்: ஏஎஃப்பி

26 Nov 2026 - 7:06 pm

2 mins read

கோலாலம்பூர்: நேப்பாள வெள்ளத்தில் காணாமற்போன மலேசியர்கள் 54 பேரும் உயிரிழந்ததாகக் கருதப்படுவதை அந்நாட்டு அதிகாரிகள் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியதும், மலேசிய தேசியப் பதிவுத் துறை இறப்புச் சான்றிதழ்களை வழங்கும் என உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை (நவம்பர் 25) நாடாளுமன்ற அமர்வில் பேசிய அவர், நேப்பாளத்தின் சட்ட, நிர்வாக நடைமுறைகளுக்கு மலேசியா கட்டுப்பட வேண்டும் என்றார். தேவையான ஆவணங்களைக் குடும்பத்தினர் சமர்ப்பிப்பதைப் பொறுத்தே இதற்கான காலம் அமையும்.

பேரிடர் தொடர்பான அவசரச் சட்டத் திருத்தத்திற்கு நேப்பாளம் ஒப்புதல் அளித்துள்ளதால், மரண அறிவிப்புக்கான காத்திருப்புக் காலம் 12 ஆண்டுகளிலிருந்து 45 நாள்களாகக் குறைந்துள்ளது. இதன் தாக்கங்களை ஆராயக் காத்மாண்டுவிலுள்ள மலேசிய வெளியுறவு அமைச்சு அதிகாரிகளுடன் தேசியப் பதிவுத் துறை இணைந்து செயல்படுவதாக அமைச்சர் கூறினார்.

பாலிக் புலாவ் நாடாளுமன்ற உறுப்பினர் முகம்மது பக்தியார் வான் சிக் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த திரு சைஃபுதீன், வெளியுறவு, மனிதவள, உள்துறை அமைச்சுகள் இணைந்து செயல்படுவதாகக் கூறினார். தகுதியுள்ள குடும்பங்களுக்குச் சமூகப் பாதுகாப்பு நிறுவன வழங்குதொகைகளை விரைந்து வழங்கும்படி மனிதவள அமைச்சுக்கு அமைச்சரவை உத்தரவிட்டுள்ளது.

வெளிநாட்டுப் பேரிடர்களில் காணாமற்போன மலேசியர்களைக் கையாளும் நடைமுறைகள் குறித்துத் தும்பாட் நாடாளுமன்ற உறுப்பினர் மும்தாஜ் முகமது நவி கேள்வி எழுப்பினார். வழக்கமாக வெளிநாட்டு மரணங்களுக்கு ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட ஏழு வேலை நாள்களில் சான்றிதழ் வழங்கப்படும்; ஆனால், பேரிடர் விவகாரங்களில் சம்பந்தப்பட்ட நாட்டு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியிருப்பதால் அவை சிக்கலானவை என்று அமைச்சர் சைஃபுதீன் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்