பேங்காக்: தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோர்னின் மூத்த மகளான இளவரசி பஜ்ரகிட்டியாபா காலமானதாக வெள்ளிக்கிழமை (ஜூன் 12), தாய்லாந்து அரண்மனை தெரிவித்துள்ளது. அவருக்கு வயது 47.
அவர் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்ததாகக் கூறப்பட்டது.
கடந்த 2022 டிசம்பர் மாதத்தில் ராணுவ நாய்ப் பயிற்சியின்போது அவர் நோய்வாய்ப்பட்டதாக முன்னர் வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இளவரசி பஜ்ரகிட்டியாபா, 78 வயதாகும் மன்னர் மகா வஜிரலோங்கோர்னுக்கும் அவரது முதல் மனைவி இளவரசி சோம்சாவலிக்கும் பிறந்த முதல் குழந்தை. மறைந்த மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ்- அரசியார் சிரிகிட் ஆகியோரின் முதல் பேரக்குழந்தை என்ற சிறப்பும் அவரைச் சாரும்.
இதயநோய், பிற தொற்றுகளின் விளைவாகச் சுயநினைவை இழந்த இளவரசி பஜ்ரகிட்டியாபா 2022 டிசம்பர் 15ஆம் தேதி பேங்காக்கில் உள்ள சுலாலோங்கோர்ன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது முதல் அவர் கோமாவில் இருந்து வந்தார்.
இவ்வாண்டு மே 21ஆம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்ததாக அரண்மனை வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
பெருங்குடல் அழற்சியால் அவரது வயிற்றில் கிருமித்தொற்று கண்டறியப்பட்டது. இது, குறைந்த ரத்த அழுத்தம், சீரற்ற இதயத் துடிப்பு, வழக்கத்துக்கு மாறான வகையில் ரத்தம் உறைதல் போன்றவற்றுக்கு வழிவகுத்து அவரது உடல்நிலை மோசமடைந்தது.
அவரது நுரையீரல் மற்றும் சிறுநீரகச் செயல்பாட்டுக்கு இயந்திரங்கள் மூலம் ஆதரவு கொடுக்கப்பட்டன. நோய் எதிர்ப்பு மருந்துகள், ரத்த அழுத்தத்தைத் தூண்டி இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் கொடுக்கப்பட்டன. இருந்தாலும் அவரது நிலை மேலும் மோசமடைந்ததாக அறிக்கை கூறியது.
தொடர்புடைய செய்திகள்
உடல் உறுப்புகளைச் செயலிழக்கச் செய்யும் தீவிரமான, கட்டுப்படுத்த முடியாத தொற்றால் அவர் சிரமப்பட்டார்.
இளவரசி பஜ்ரகிட்டியாபா, புகழ்பெற்ற கார்னல் பல்கலைக்கழகத்தில் சட்டத் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்.
அதற்குப் பிறகு தாய்லாந்தின் தலைமைச் சட்ட அலுவலகத்தில் அவர் பணியாற்றினார். ஐக்கிய நாட்டு நிறுவன (ஐநா) அங்கீகாரம் பெற்ற தாய்லாந்தின் நீதி நிறுவனத்தின் சிறப்பு ஆலோசனைக் குழுவின் தலைவராகவும் அவர் இருந்தார்.
2012 முதல் 2014 வரை இளவரசி பஜ்ரகிட்டியாபா, ஆஸ்திரியாவுக்கான தாய்லாந்தின் தூதராகவும் வியன்னாவில் உள்ள ஐநாவுக்கான தாய்லாந்தின் நிரந்தரப் பிரதிநிதியாகவும் செயல்பட்டார்.
சீர்திருத்த நிலையங்களில் உள்ள பெண் கைதிகள் மற்றும் அவர்களது குழந்தைகளின் சிறப்புத் தேவைகள், பாதிப்புகளைக் கையாள்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு திட்டத்தைத் தொடங்கியதால் அவர் புகழ்பெற்றார்.
செப்டம்பர் 2008ல் இளவரசி பஜ்ரகிட்டியாபா, தாய்லாந்திற்கான ஐநா பெண்கள் அமைப்பின் தேசியத் தூதராக நியமிக்கப்பட்டார்.

