தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மாணவனைக் கொன்ற ஆடவருக்கு நிறைவேறிய மரண தண்டனை

2 mins read
5630cbe4-d80c-43a9-bb95-76152e06cbf6
‌ஷென்சென் ஜப்பானியப் பள்ளியில் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தெதி கொலைசெய்யப்பட்ட 10 வயது மாணவனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தோக்கியோ: சீனாவின் ‌ஷென்சென் நகரில் 10 வயது ஜப்பானிய பள்ளி மாணவனைக் கொலைசெய்த சீன ஆடவருக்கு செவ்வாய்கிழமை (ஏப்ரல் 22) மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜப்பானியப் பள்ளிக்கு அருகே மாணவனைக் கத்தியால் குத்திய சொங் ‌சாங்சுன் என்ற ஆடவருக்கு இவ்வாண்டு ஜனவரி மாதம் மரணத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆடவர் மரணத் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவில்லை.

மாண்ட மாணவன் ஜப்பானியத் தந்தைக்கும் சீனத் தாய்க்கும் பிறந்தவன்.

கொலை செய்த ஆடவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டதை சீன வெளியுறவு அமைச்சு பெய்ச்ஜிங்கில் உள்ள ஜப்பானியத் தூதரகத்திடம் தெரிவித்துவிட்டதாகத் தகவல் அறிந்த வட்டாரம் குறிப்பிட்டது.

ஜியாங்சி மாநிலத்தைச் சேர்ந்த ஆடவர் ஜனவரி 24ஆம் தேதி தாம் கொலைசெய்த சிறுவனின் குடும்பத்திடமும் சீனாவில் உள்ள ஜப்பானியத் தூதரகத்திடமும் பேசவேண்டும் என்று நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டதாக சீனாவுக்கான தூதர் திரு கெஞ்சி கனசுகி தெரிவித்தார்.

இருப்பினும் கொலை செய்த ஆடவர் ஜப்பான் நாட்டவரைக் குறிவைத்ததாகக் கூறவில்லை என்றார் அவர்.

தாக்குதல் மூலம் இணையத்தில் கவனத்தை ஈர்ப்பதற்காகக் கத்தியை வாங்கிய சொங் சிறுவனைத் தாக்கியதாக நீதிமன்ற தீர்ப்பில் வாசிக்கப்பட்டதை திரு கெஞ்சி குறிப்பிட்டார்.

‌ஷென்சென்னில் உள்ள ஜப்பானியப் பள்ளிக்கூடத்துக்குச் சென்றுகொண்டிருந்தபோது கத்தியால் குத்தப்பட்ட சிறுவன் மறுநாள் உயிரிழந்தான்.

‌ஷென்யாங்கிற்கு அருகில் உள்ள ரயில்பாதைமீது ஜப்பானியர்கள் குண்டு போட்ட 93ஆம் ஆண்டு நிறைவை அனுசரிக்கும் நாளில் கத்திக்குத்துத் தாக்குதல் நடைபெற்றது.

கடந்த ஜூன் மாதம் ‌‌ஷங்காய்க்கு அருகில் உள்ள சுச்சோவ் நகருக்கு அருகில் ஜப்பானிய பள்ளிப் பேருந்து நிறுத்துமிடத்தில் சீனப் பெண்ணையும் இரண்டு ஜப்பான் நாட்டவரையும் கத்தியால் குத்திய சீன ஆடவரின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஜப்பானிய அரசாங்க அதிகாரிகள் கடந்த வாரம் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்