பெய்ஜிங்: சீன எல்லைப் பகுதியில் மியன்மாரின் ‘கொக்காங்’ வட்டாரத்தில் கொடும் குற்றங்களில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த ஐவருக்கு செவ்வாய்க்கிழமை (நவம்பர் 4) மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதனைச் சீன அரசாங்க ஊடகமான சின்ஹுவா தெரிவித்துள்ளது.
சட்டதிட்டங்களுக்கு அப்பாற்பட்டு செயல்படும் மியன்மாரின் எல்லைப்புற நகரங்களில் பல மோசடி முகாம்கள் உருவெடுத்துள்ளன. வேலை வாய்ப்புகள் வழங்கப்படுவதாக வெளிநாட்டினர், குறிப்பாக சீனர்கள் ஏமாற்றி கடத்தப்பட்டு அங்கு குற்றச்செயல்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அந்தச் சட்டவிரோத செயல்பாடுகளில் பல பில்லியன் வெள்ளி பணம் மோசடிகளில் ஏமாற்றப்பட்டுள்ளது.
அண்மைய மாதங்களில் தென்கிழக்காசிய நாடுகளுடன் சீனா ஒத்துழைப்பை மேம்படுத்தியது. குற்றக்கும்பல்கள் செயல்படும் முகாம்களை கண்டறிந்து, ஆயிரக்கணக்கில் கடத்தப்பட்டோரை மீண்டும் சீனாவுக்கு அதன் அரசாங்கம் நாடு திரும்பவைத்துள்ளது.
தென்சீன நகரான ஷென்சன் நீதிமன்றத்தில் அந்த ஐவரின் வழக்கு விசாரிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட ஐவரும், ஆறு சீன நாட்டவர்களின் மரணத்துக்கும், ஒருவரின் தற்கொலைக்கும், பலரின் படுகாயங்களுக்கும் காரணமானவர்கள் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று சின்ஹுவா தெரிவித்தது.
மியன்மாரின் கொக்காங் வட்டாரத்தில் குற்றவாளிகள் 41 மோசடி முகாம்களை கட்டமைத்துள்ளனர். தொலைத்தொடர்பு மோசடி, சூதாட்ட மையங்கள், திட்டமிட்ட கொலைகள், வற்புறுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல், நாடுகளின் எல்லைகளை சட்டவிரோதமாக கடந்து செல்லுதல் போன்ற பலவகை குற்றங்களை அவர்கள் செய்துள்ளனர்.
மேலும் இரண்டு குற்றவாளிகளுக்கு பெரும்பாலும் ஆயுள் தண்டனைக்கு வழிவகுக்கும் இரண்டு ஆண்டு கால அவகாசத்துடனான மரண தண்டனையை நீதிமன்றம் விதித்துள்ளது.
மோசடி குற்றங்களுக்கு கைதான வேறு ஐவருக்கு ஆயுள் தண்டனையும், ஒன்பது குற்றவாளிகளுக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இவ்வாண்டு ஏப்ரல் மாதம் ஐக்கிய நாட்டு நிறுவனம், சீனா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்த குற்றக்கும்பல்கள் இணைய மோசடிகளின்வழி பில்லியன்கணக்கான பணத்தை ஏமாற்றியுள்ளன என்று எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

