ஆந்த்ராக்ஸ் பாதிப்பால் தாய்லாந்தில் ஒருவர் உயிரிழப்பு

1 mins read
0c149b07-a48d-4af6-8f7e-5acc1cd56dde
ஆந்த்ராக்சால் மாண்டவரின் உடல், அவர் இறந்த நாளன்றே எரியூட்டப்பட்டது. - படம்: நேஷன் தாய்லாந்து

பேங்காக்: உயிர்க்கொல்லி நோயான ஆந்த்ராக்ஸ் காரணமாக ஒருவர் மாண்டுபோனதை அடுத்து, தாய்லாந்தின் வடகிழக்கு மாநிலமான முக்தகனின் டோன் டான் மாவட்டம் கண்காணிக்கப்படும் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாட்டிறைச்சியைக் கையாண்டதாலும் முழுவதுமாகச் சமைக்காமல் அதனை உண்டதாலும் அந்த மனிதரை ஏப்ரல் 27ஆம் தேதி ஆந்த்ராக்ஸ் தொற்றியதாக டோன் டான் மாவட்டத் தலைவர் சக்ரித் சும்சான் வியாழக்கிழமை (மே 1) தெரிவித்தார்.

அதன் காரணமாக அவருக்குக் காய்ச்சல் கண்டதாகவும் உடலில் கொப்புளங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. முதலில் டோன் டான் மருத்துவமனையிலும் பின்னர் முக்தகன் மருத்துவமனையிலும் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆயினும், சிகிச்சை பலனளிக்காமல் புதன்கிழமை பிற்பகல் அவர் உயிரிழந்தார். அதே நாளில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

இதனையடுத்து, நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துமாறும் ஆந்த்ராக்ஸ் மேலும் பரவாமல் தடுக்க தீவிரக் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளுமாறும் உள்ளூர் அரசாங்க அதிகாரிகள், கிராமத் தலைவர்கள், சுகாதார அமைப்புகள் ஆகியோர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அம்மாவட்டத்தில் கால்நடைகளைக் கொல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தொற்று அறிகுறிகள் தொடர்பில் கால்நடைகளைக் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன், பாதிக்கப்பட்ட லாவ் மீ உள்மாவட்டப் பகுதியில் கால்நடைகளுக்குத் தடுப்பூசி போடும் நடவடிக்கையும் தொடங்கப்பட்டுள்ளது.

‘பேசில்லஸ் ஆந்த்ரசிஸ்’ எனும் நுண்ணுரியே ஆந்த்ராக்ஸ் நோய்க்குக் காரணம். அந்நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகளைக் கையாளும்போது அல்லது உண்ணும்போது மனிதர்களையும் அது தொற்றும். ஆயினும், ஒரு மனிதனிடமிருந்து இன்னொருவர்க்கு அது பரவாது எனச் சொல்லப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்