இந்தோனீசியக் கப்பல் விபத்தில் மாண்டோர் எண்ணிக்கை 64க்குக் கூடியது

இந்தோனீசியக் கப்பல் விபத்தில் மாண்டோர் எண்ணிக்கை 64க்குக் கூடியது

படம்: ராய்ட்டர்ஸ்

27 Sep 2026 - 12:03 pm

2 mins read

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் ஜாவா கடலில் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு முன்பு கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானோரின் எண்ணிக்கை 64க்குக் கூடியுள்ளதாக அதிகாரி ஒருவர் சனிக்கிழமை (செப்டம்பர் 26) தெரிவித்தார்.

காணாமற்போன பலரைத் தேடும் பணியை மீட்புக் குழுவினர் நீட்டித்துள்ளனர்.

‘வெர்கோ டிரான்ஸ்போர்ட் 8’ என்ற அந்தக் கப்பல், இந்தோனீசியாவின் இரண்டாவது பெரிய நகரமான சுரபாயாவிலிருந்து போர்னியோவில் உள்ள பஞ்சர்மசின் நோக்கிப் புறப்பட்டபோது, அதில் 213 பயணிகளும் 30 ஊழியர்களும் இருந்தனர். பயணம் தொடர்ந்த நிலையில், அது தனது கப்பல் நிறுவனத்துடனான தொடர்பை இழந்தது.

“கப்பலில் இருந்த 243 பேரில் 172 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 108 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 64 பேர் உயிரிழந்தனர். மேலும் 71 பேரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது,” என்று தேசியத் தேடுதல், மீட்பு அமைப்பு அதிகாரி யுதி பிராமந்தியோ செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

செப்டம்பர் 26ஆம் தேதி மூழ்கிய படகில் இருந்து நான்கு உடல்களையும் கடலோரப் பகுதிகளில் இருந்து மேலும் ஏழு உடல்களையும் மீட்புக் குழுவினர் மீட்டதாக அவர் தெரிவித்தார்.

தேடுதல் நடவடிக்கை மேலும் ஏழு நாள்களுக்கு நீட்டிக்கப்படும் என்றும் ஆனால் ஒவ்வொரு மூன்று நாள்களுக்கும் அதன் நிலைமை மதிப்பீடு செய்யப்படும் என்றும் திரு யுதி மேலும் கூறினார்.

அன்றாடப் போக்குவரத்துக்கும் சுற்றுலாவுக்கும் படகு, கப்பல் போக்குவரத்தையே பெரிதும் நம்பியிருக்கும் 17,000க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட இந்தோனீசியாவில், கடல்புற விபத்துகள் நிகழ்வது வழக்கம்.

முறையற்ற பாதுகாப்புத் தரநிலைகளும் கணித்துக் கூற முடியாத வானிலையுமே இத்தகைய பேரிடர்களுக்கு பெரும்பாலும் முக்கியக் காரணங்களாக அமைகின்றன.

குறிப்புச் சொற்கள்
இந்தோனீசியாகப்பல்விபத்துமரணம்பாதுகாப்புதரநிலைவானிலைபேரிடர்தீவு