பெய்ஜிங்: தென்மேற்கு சீனாவில் உள்ள உல்லாசப் பயணிகளுக்கு கண்கவர் விருந்தாக அமையும் பகுதியில் நான்கு படகுகள் கவிழ்ந்து 9 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும், 70 பேர் காயமடைந்துள்ளனர் என்று சீன ஊடகத் தகவல் திங்கட்கிழமை (மே 5) தெரிவித்தது.
பயணிகளை ஏற்றிச் சென்ற அந்தப் படகுகள் ஞாயிற்றுக்கிழமை (மே 4) குவிசாவ் மாநிலத்தின் கியான்ஸி நகரில் உள்ள ஆற்றில் கவிழ்ந்ததால் 84 பேர் ஆற்று நீரில் வீழ்ந்ததாகக் அரசு ஊடகமான சிசிடிவி கூறியது.
அங்கு பெய்த கனமழையால் படகுகள் ஞாயிற்றுக்கிழமை கிட்டத்தட்ட பிற்பகல் 4 மணிக்கு கவிழ்ந்ததாக ஸின்ஹுவா செய்தி நிறுவனத்தை மேற்கோள் காட்டி செய்தி கசிந்தது.
விபத்தில் பயணிகளும் படகுச் சிப்பந்திகளும் ஆற்றில் வீழ்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இரவு 7.00 மணிவாக்கில் 50க்கும் மேற்பட்டோர் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
திங்கட்கிழமை காலை நிலவரப்படி, ஒன்பது பேர் மரணமடைந்தனர் என்றும் 70 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளதாகவும் ஸின்ஹுவா செய்தி நிறுவனம் விளக்கியது. விபத்தில் நால்வருக்கு காயமேற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
ஒருவரை இன்னும் காணவில்லை என்று கூறப்பட்டுள்ளது.