தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தோனீசியப் பள்ளி இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழப்பு அதிகரிப்பு

1 mins read
1c9f0349-d7d7-4b0b-b03e-2906eafd78bd
அல் கொஸினி பள்ளி இடிபாடுகளில் தேடல் பணிகள் தொடரும் வேளையில் அங்கு திரண்ட மக்கள். - படம்: ஏஃப்பி

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் சென்ற வாரம் அல் கொஸினி எனும் பள்ளி இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை குறைந்தது 49ஆக அதிகரித்துள்ளது.

அந்நாட்டின் பேரிடர் தவிர்ப்பு அமைப்பு திங்கட்கிழமை (அக்டோபர் 6) அறிக்கையில் இச்செய்தியை வெளியிட்டது. மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளைக் கிட்டத்தட்ட அகற்றிவிட்ட நிலையில் இச்செய்தி வெளியாகியுள்ளது.

கிழக்கு ஜாவா மாநிலத்தின் சிடாவர்ஜோ நகரில் மாணவர்கள் தங்கிப் படிக்கும் இஸ்லாமியப் பள்ளி ஒன்று சென்ற வாரம் இடிந்து விழுந்தது. தரைக்கற்கள் நூற்றுக்கணக்கான மாணவர்கள் மீது இடிந்து விழுந்தன. அவர்களில் பெரும்பாலோர் பதின்ம வயது ஆண்கள்.

தோண்டி எடுக்கும் இயந்திரங்களைக் கொண்டு மீட்புப் பணியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 5) 80 விழுக்காட்டு இடிபாடுகளை அகற்றி முடித்தனர். இடிபாடுகளில் உயிரிழந்தோரின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பேரிடர் தவிர்ப்பு அமைப்பு அறிக்கையில் குறிப்பிட்டது.

சம்பவத்தில் சிக்கியவர்களுக்கான தேடல் தொடரும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளியின் மேல் தளங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்த கட்டுமானப் பணிகளைக் கட்டடத்தின் அடிப்படை கட்டமைப்பால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதன் காரணமாக பள்ளிக் கட்டடம் இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்தோனீசியாவில் பல இஸ்லாமியப் பள்ளிகள் கட்டட உரிமமின்றி இயங்குவதாக அந்நாட்டின் பொதுப் பணிகள் அமைச்சர் டோடி ஹங்கோடோ கூறியதாக உள்ளூர் ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன. அல் கொஸினி பள்ளிக்குக் கட்டட உரிமம் இருந்ததா என்பது தெரியவில்லை.

குறிப்புச் சொற்கள்