குப்பை நிரப்பும் நிலம் சிதைந்ததில் மாண்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

1 mins read
9039b219-f7c4-40c4-b43e-6dc0178893fb
கிட்டத்தட்ட 20 மாடி வரை உயரமான பெரும் குப்பை மேடு சிதறியதில் அருகிலுள்ள மறுபயனீட்டு வசதியும் பணியாளர்க் குடியிருப்புகளும் குப்பையால் மூழ்கடிக்கப்பட்டன. - படம் ஏஎஃப்பி

சிபு: பிலிப்பீன்சின் மத்திய பகுதியிலுள்ள சிபு(Cebu) நகரில் குப்பை நிரப்பும் நிலம் சரிந்து விழுந்ததில், குறைந்தது 28 பேர் உயிரிழந்ததாக நகரக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பினாலிவ் (Binaliw) பகுதியில் அமைந்துள்ள தனியார் குப்பைக் கிடங்கில் இச்சம்பவம் கடந்த வாரம் ஜனவரி 9ல் உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணியளவில் நிகழ்ந்தது.

கிட்டத்தட்ட 20 மாடி உயரமுள்ள பிரம்மாண்டமான குப்பை மேடு சரிந்ததில், அருகிலுள்ள மறுசுழற்சி மையமும் பணியாளர் குடியிருப்புகளும் குப்பைகளுக்குள் புதைந்தன.

இச்சம்பவத்தில் குறைந்தது 28 பேர் உயிரிழந்ததைச் சீபு நகரக் காவல்துறை ஜனவரி 16ல் உறுதி செய்தது. இதுவரை 18 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பிரைம் வேஸ்ட் சொல்யூஷன்ஸ் சீபு’ (Prime Waste Solutions Cebu) எனும் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தக் குப்பைக் கிடங்கில் விபத்து நேர்ந்தபோது, அங்கு ஏறத்தாழ 50 பணியாளர்கள் இருந்ததாகக் காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

உயிரிழந்தவர்களில் மின்னியல் பொறியாளர் ஜான் பால் அபிலானும் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மற்றவர்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மீட்புப் பணிகளுக்காக 300க்கும் மேற்பட்ட பணியாளர்களும் இரண்டு பெரிய பாரந்தூக்கிகளும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. உலோக இடிபாடுகளை அகற்ற வேண்டியிருந்ததால் மீட்புப் பணிகள் மேலும் தாமதமானதாகக் கூறப்படுகிறது. விபத்து குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.

குறிப்புச் சொற்கள்