கலேலா/வடக்கு ஹல்மஹெரா: இந்தோனீசியாவில் உள்ள எரிமலை வெடிப்பில் இரண்டு சிங்கப்பூரர்களின் மரணம் உள்நாட்டு தேடுதல் மீட்பு முகவையால் ஞாயிற்றுக்கிழமை (மே 10) உறுதி செய்யப்பட்டது.
கடந்த வியாழக்கிழமை (மே 7) உள்ளூர் அதிகாரிகளின் எச்சரிக்கைகளை மீறி 20 மலையேறிகள் அப்பகுதியில் மலையேறும் முயற்சியில் இறங்கினர். அக்குழுவில் ஒன்பது சிங்கப்பூரர்களும் 11 இந்தோனீசியர்களும் இருந்தனர்.
அப்பகுதியில் ஏற்கெனவே மலையேறத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. எரிமலை வெடிக்கும் அபாயம் உள்ளதென மார்ச் மாதமே தெரிவிக்கப்பட்டு, எரிமலையின் உச்சியில் இருந்து நான்கு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் யாரும் செல்லவேண்டாம் என ஏப்ரல் 17ஆம் தேதி உள்ளூர் அமைப்புகள் அறிவித்திருந்தன.
எதிர்பாராத விதமாக வெள்ளிக்கிழமை (மே 8) காலை எரிமலை வெடிக்கத் தொடங்கியதில் அந்த இரு சிங்கப்பூரர்களுடன் மற்றொரு இந்தோனீசிய மாதும் காணாமல் போயினர். அவர்கள் மரணமடைந்திருக்கக்கூடும் என்று நேரில் அவர்களுடன் இருந்த சிலரால் சந்தேகிக்கப்பட்டது.
மலையேறிய மீதம் உள்ள ஏழு சிங்கப்பூரர்களும் பத்து இந்தோனீசியர்களும் பாதுகாப்பாக மலையிலிருந்து இறங்கிவிட்டனர். மரணமடைந்த மூவரில் இந்தோனீசிய மாதின் உடல் மறுநாள் சனிக்கிழமை (மே 9) மலை உச்சியின் அருகே கண்டெடுக்கப்பட்டது.
எரிமைலை வெடிப்புச் சிதைவில் இரு சிங்கப்பூரர்களின் உடல்கள் ஆழமாகச் சிக்கிக்கொண்டன. மலை உச்சியில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் உடல்கள் சேற்றிலும் எரிமலைக் குழம்பிலும் பாதி மூழ்கிவிட்டன.
அவர்களின் உடல்களை இருபெரும் பாறைகள் மண்ணுக்குள் அழுத்திவிட்டதாக மீட்புப் பணியில் பங்காற்றிய உள்ளூர்வாசி ரிஸ்மான் உமார் கூறினார்.
உடல்களை மீட்டெடுக்க அதிகாரிகள் போராடினர். ஏனெனில் தொடர்மழை அவர்களின் முயற்சிக்குத் தடையாக அமைந்தது. கைகளால் மண்ணைத் தோண்டிய அதிகாரிகள் ஞாயிறு மதியம் 12.40 மணியளவில் உடல்களை மீட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
எரிமலை வெடித்தபோது பாறைகளும் சாம்பலும் தீக்குழம்பும் அவர்கள்மீது விழுந்து இருவரையும் புதைத்துவிட்டதால் அவர்கள் அங்கேயே மரணமடைந்தனர். இந்த விவரங்களை இவான் ரம்தானி என்ற டர்நெட் நகர மீட்புப் பணிக் குழுவின் தலைவர் தெரிவித்தார்.
இந்தோனீசிய அதிகாரிகளால் மீட்கப்பட்ட ஏழு சிங்கப்பூர் மலையேறிகளும் ஜகார்த்தா வழியாக ஞாயிற்றுக்கிழமை (மே 10) சிங்கப்பூர் திரும்புவர் என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

