நோம்பென்: பருவநிலை மாற்றத்தைத் தவிர குறைந்துவரும் பிறப்பு, கருவுறும் விகிதங்கள் குறைந்து வருவது ஆசியான் பொருளியல் வளர்ச்சிக்கு இடையூறாக விளங்கக்கூடும் என்ற பெரும் அச்சம் நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாறிவரும் வாழ்க்கைமுறை, நகரமயமாதல் ஆகியவற்றின் காரணமாக தென்கிழக்காசிய வட்டாரத்தில் பொருளியல் நிலவரம் ஆக்ககரமாக அமைவதில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று நம்பப்படுகிறது.
தென்கிழக்காசியாவின் மக்கள்தொகை சுமார் 670 மில்லியனாகும். எனினும், மூப்படையும் சமூகம், குறையும் பிறப்பு விகிதம் ஆகிய பிரச்சினைகளால் சமூகத்தில் ஏற்படும் தாக்கத்தை இவ்வட்டார அரசாங்கங்கள் ஆராய வேண்டும் என வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளதாக மலாய் மெயில் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஆசியான், உலகளவில் மூன்றாவது ஆக அதிக மக்கள்தொகையைக் கொண்ட வட்டாரம் என்று ‘ஆசியான் முக்கியப் புள்ளி விவரங்கள் 2023’ அறிக்கையில் தெரிய வந்துள்ளது. இந்தியா, சீனாவுக்கு அடுத்த நிலையில் ஆசியான் இருக்கிறது.
பருவநிலை மாற்றம், குறைந்துவரும் பிறப்பு விகிதம் ஆகியவை ஆசியானின் வளர்ச்சி வாய்ப்புகளுக்குப் பங்கம் விளைவிக்கக்கூடும் என்று ‘ஆசியான் பிரீஃபிங்’ ஊடகத்தின் இணை ஆசிரியர் அய்மான் ஃபாலக் மெடினா பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
ஆசியானுக்குப் பருவநிலை மாற்றம் சவாலாக இருந்தாலும் குறைந்து வரும் பிறப்புகள், கருவுறும் விகிதத்தைக் கையாள்வதே அதைவிடப் பெரிய சவாலாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். அந்த அம்சங்கள், ஒட்டுமொத்த உற்பத்தித்திறனைப் பாதிக்கும், அதன் விளைவாக ஒவ்வொரு நாடும் பருவநிலை மாற்றத்தைக் கையாளும் ஆற்றலைப் பாதிக்கக்கூடும் என்று அவர் சுட்டினார்.
மக்கள்தொகை குறைவது, பொருளியல் வளர்ச்சி, சமூக மேம்பாடு ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று வல்லுநர்கள் அஞ்சுகின்றனர். போதுமான ஊழியர்கள் இல்லாததால் சுருங்கும் இளையர் சமூகம் போன்ற பிரச்சினைகள் எழக்கூடும் என்ற கவலையும் நிலவுகிறது.
அதேவேளை, மக்கள்தொகை வளர்ச்சி மெதுவடைவது சாதகமாக இருக்கலாம் என்று சிலர் கருத்துரைக்கின்றனர். அத்தகைய சூழ்நிலையில் வாழ்க்கைத் தரம் மேம்படும், நிதிச் சுமை குறையும், எரிசக்தி, நிலம், தண்ணீர் போன்ற முக்கிய இயற்கை வளங்களுக்கான தேவை குறையும் என்பது அவர்களின் வாதம்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த 10 ஆண்டுகளில் ஆசியானின் ஒட்டுமொத்த கருவுறும் விகிதம் குறைந்துள்ளது. இந்தச் சவாலைக் கையாள சமூகப் பாதுகாப்பு, மூத்த குடிமக்களைக் கவனித்துக்கொள்வது, சுகாதாரப் பராமரிப்பு போன்ற அம்சங்களில் அரசாங்கங்கள் செலவு செய்யவேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

