குறையும் வாசிப்புப் பழக்கம், குறுகிய மனப்பான்மை நாகரிகத்திற்கு அச்சுறுத்தல்: அன்வார்

குறையும் வாசிப்புப் பழக்கம், குறுகிய மனப்பான்மை நாகரிகத்திற்கு அச்சுறுத்தல்: அன்வார்

படம்: அன்வார் இப்ராகிம்/ஃபேஸ்புக்

29 Oct 2026 - 5:42 pm

2 mins read

கோலாலம்பூர்: மின்னிலக்கக் காலகட்டத்தில் வாசிப்புப் பழக்கம் குறைந்து வருவதும் குறுகிய மனப்பான்மை அதிகரித்து வருவதும் எதிர்கால மனித நாகரிகத்திற்குப் பெரிய அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் எச்சரித்துள்ளார்.

ஜேம்ஸ் மேரியட் எழுதிய ‘த நியூ டார்க் ஏஜஸ்: தி எண்ட் ஆஃப் ரீடிங் அண்ட் த டான் ஆஃப் எ போஸ்ட்-லிட்டரேட் சொசைட்டி’ என்ற அண்மைய நூலை வாசித்த பின்னர், பிரதமர் அன்வார் தமது எண்ணங்களை புதன்கிழமையன்று (அக்டோபர் 28) ஃபேஸ்புக் பதிவு வழியாகப் பகிர்ந்துகொண்டார்.

தற்காலத்தில் தகவல்களும் அறிவுசார் தரவுகளும் மிகுந்து கொட்டிக்கிடக்கின்றன என்று குறிப்பிட்ட பிரதமர் அன்வார், நாகரிகத்திற்கான அச்சுறுத்தல் அறிவைப் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைந்ததால் ஏற்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார்.

மாறாக, வாசிப்பதிலும் ஆழமாகவும் நுட்பமாகவும் யோசிப்பதிலும் சமுதாயத்துக்கு உள்ள ஆர்வமும் பொறுமையும் குறைந்து வருவதே உண்மையான அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது என்று அவர் தெளிவுபடுத்தினார்.

“தகவல்களில் பெரும் செல்வந்தர்களாகத் திகழலாம். ஆனால், ஞானத்திலும் விவேகத்திலும் ஏழ்மை நிலையிலேயே உள்ளோம். எனவே, மனித இனம் இன்னமும் வாசிக்கிறதா என்பது மட்டுமே இங்கு கேள்வியல்ல. மனித குலம் இன்னும் சிந்திக்க விரும்புகிறதா என்பதே முதன்மையான கேள்வி,” என்று அவர் ஆணித்தரமாகக் கூறினார்.

வரலாற்றை நினைவுகூர்ந்த பிரதமர் அன்வார், அறிவார்ந்த சிந்தனை மற்றும் இலக்கிய மரபுகளுக்கு மனித சமுதாயம் எத்தகைய உயர்ந்த மரியாதையை அளித்தது என்பதை விளக்கினார். 1885ஆம் ஆண்டில் தலைசிறந்த பிரெஞ்சு எழுத்தாளர் விக்டர் ஹியூகோ மறைந்தபோது, அவருக்கு இறுதி மரியாதை செலுத்த பாரிஸ் நகரில் ஏறத்தாழ இரண்டு மில்லியன் மக்கள் திரண்டதை அவர் சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று, 1881ஆம் ஆண்டில் புகழ்பெற்ற ரஷ்ய இலக்கிய மேதை ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky) காலமானபோதும், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடைபெற்ற அவரது இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர் என்பதை பிரதமர் அன்வார் நினைவுகூர்ந்தார். இலக்கியம், கலாசாரம், அறிவார்ந்த மரபுகள் மற்றும் சிந்தனைகளுக்கு அக்காலச் சமுதாயம் எந்த அளவுக்கு ஆழ்ந்த மதிப்பளித்தது என்பதை இந்நிகழ்வுகள் மெய்ப்பிக்கின்றன என்று அவர் தெரிவித்தார்.

“அவர்கள் இருவரும் மன்னர்களோ அல்லது போரில் வெற்றிவாகை சூடிய படைத்தளபதிகளோ அல்லர். மாறாக, அவர்கள் சமுதாயத்தின் இதயங்களிலும் மனங்களிலும் ஆழமாகத் தாக்கத்தை ஏற்படுத்திய சிந்தனையாளர்களாகவும் பேராசிரியர்களாகவுமே திகழ்ந்தனர்,” என்றும் பிரதமர் அன்வார் தமது பதிவில் எடுத்துரைத்தார்.

குறிப்புச் சொற்கள்