கலிஃபோர்னியா: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலம் தீபாவளியை அதிகாரபூர்வ விடுமுறையாக விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே பென்சில்வேனியாவிலும் கனெக்டிகட்டிலும் தீபாவளிக்கு விடுமுறை விடப்படுகிறது.
தீபாவளியை அதிகாரத்துவ விடுமுறைப் பட்டியலில் சேர்த்துக்கொள்ள வழிவிடும் மசோதா மாநிலச் சட்டமன்றத்தில் சென்ற வாரம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மசோதாவைப் பாராட்டிய சமூகத் தலைவர் ஒருவர், ‘அமெரிக்கா, குடியேறிகளின் நாடு’ எனும் செய்தியை இது உலகிற்குப் பறைசாற்றுவதாகக் குறிப்பிட்டார்.
புதிய மசோதாவின்படி தீபாவளியன்று கலிஃபோர்னியாவில் உள்ள சமூகக் கல்லூரிகள், பொதுப் பள்ளிகள் முதலியவற்றுக்கு விடுமுறை விடப்படும். சட்டம் நடப்புக்கு வந்த பிறகு, அந்த மாநிலத்தில் வேலைசெய்வோர் அன்றைய நாளில் விடுப்பு எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவர்.
மசோதா, சட்டமாவதற்கு ஆளுநர் கவின் நியூசம் அடுத்த மாதம் (அக்டோபர் 2025) 12ஆம் தேதிக்கு முன்னர் அதில் கையெழுத்திட வேண்டும்.
கலிஃபோர்னியாவில் தற்போது 11 அரசாங்க விடுமுறைகள் விடப்படுகின்றன.
“தீபாவளியை அதிகாரபூர்வ விடுமுறையாக அறிவிப்பது பண்டிகையின் சமய, வரலாற்று முக்கியத்துவத்தை மட்டும் அங்கீகரிக்கவில்லை; மாறாக, உலகின் ஆகப் பழைமையான சமய விடுமுறைகளில் ஒன்றான தீபாவளிக் கொண்டாட்டத்தில் இந்தியச் சமூகத்தினருடன் மற்றவர்களும் பங்கெடுக்கவும் அது வகைசெய்யும்,” என்று சட்டமன்ற உறுப்பினர் ஆஷ் கல்ரா கூறினார். அவர்தான் தீபாவளிக்கு விடுமுறை அளிக்கவேண்டும் என்ற மசோதாவை முன்மொழிந்தவர்.
இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.