கோலாலம்பூர்: புக்கிட் ஜாலிலில் உள்ள தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்ற 24வது தீபாவளி திருவிழா, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட சுமார் 200,000 பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. இது, இந்த நிகழ்வு வெறும் பண்டிகைக்கால விற்பனை தளம் மட்டுமல்ல, உள்ளூர் வணிகங்களை ஊக்குவிக்கும் ஒரு தளமாகவும் திகழ்கிறது என்பதை நிரூபித்தது.
அக்டோபர் 30ம் தேதி தொடங்கி ஒன்பது நாள்கள் நடைபெற்ற இந்தத் திருவிழாவிற்கு கிடைத்த சிறப்பான வரவேற்பு, 700 தொழில்முனைவோருக்குத் தங்கள் சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்தவும், விற்பனையை அதிகரிக்கவும் ஒரு நல்ல வாய்ப்பை வழங்கியுள்ளது என்று மனிதவள அமைச்சர் ஆர். ரமணன் தெரிவித்தார்.
இதில் பங்கேற்றுள்ள அங்காடிகளின் வணிகச் செயல்பாடுகள் சாதகமான வளர்ச்சியைக் காட்டுகின்றன என்பதைத் தம்மால் உணர முடிகிறது என்று அவர் கூறினார்.
“ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக உள்ளன. நான் இங்குள்ள அங்காடிகளைப் பார்வையிட்டேன். அங்கு விற்பனை மிகவும் நன்றாக இருக்கிறது. இந்தத் திருவிழா நடத்தப்படுவது இது 24வது முறை என்று நான் அறிகிறேன்.
“மேடான், சிங்கப்பூர், ஆஸ்திரேலியாவிலிருந்து சிலர் வந்திருந்தனர். சிலர் மலேசியாவிற்குச் சுற்றுலாப் பயணிகளாக மட்டுமே வந்திருந்தாலும், இந்த விற்பனைத் திருவிழாவில் கலந்துகொண்ட பிறகு, அவர்கள் மீண்டும் மீண்டும் இங்கு வருகிறார்கள்,” என்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 6) தீபாவளித் திருவிழாவைப் பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
இந்தத் திருவிழாவில் பங்கேற்கும் தொழில்முனைவோரை வலுப்படுத்துவதற்குத் தேவையான ஆதரவையும் உதவிகளையும் வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது என்று திரு ரமணன் தெரிவித்தார்.
இந்தக் கொண்டாட்ட நிகழ்வில், தீபாவளிக்குத் தேவையான பொருள்கள், உணவு, பானங்கள், அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் பல்வேறு கடைக்காரர்களும் உள்ளூர் தொழில்முனைவோரும் ஒன்றுகூடினர் என்று பெர்னாமா கூறியது.
