தைவானின் இறையாண்மையைக் காப்போம்: அதிபர் லாய்

2 mins read
4bb0f056-96a8-40d7-836a-f6061a34f7d7
கடந்த அக்டோபர் மாதம் 10ஆம் தேதி அதிபர் லாய் சிங் தே, தைவானில் தேசிய தின உரையாற்றும் காட்சி. - படம்: ஏஎஃபி

தைப்பே: தைவானின் இறையாண்மையைத் தற்காப்போம் என்று நாட்டு மக்களுக்கு அளித்த புத்தாண்டு உரையில் வியாழக்கிழமை (ஜனவரி1) அதிபர் லாய் சிங் தே சூளுரைத்துள்ளார்.

கடந்த வாரம் சீனா, தைவான் அருகே ராணுவப் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கான பதிலடியாக அதிபரின் உரை கருதப்படுகிறது.

அதோடு தைவான் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாக உள்ள எதிர்க்கட்சியினரிடம் உள்நாட்டில் வேறுபாடுகள் இருந்தாலும் சீனா எதிர்ப்பில் ஒற்றுமையை நிலைநாட்டவேண்டும் என்று அவர் அறைகூவல் விடுத்தார்.

ராணுவப் பயிற்சி என்ற பெயரில் சீனா பல போர்க்கப்பல்களைக் கொண்டு தைவான் தீவை சுற்றிவளைத்ததோடு, ஏவுகணைகளையும் போர் விமானங்களையும் அதன் அருகே நிறுத்திவைத்துள்ளது.

தைவான் தன்னை சுதந்திர நாடு என்று பிரகடனப்படுத்துவதை சீனா நிராகரித்து, அதனைத் தனது மாநிலங்களில் ஒன்றாக குறிப்பிட்டு வருகிறது.

“இறையாண்மையை தற்காத்து, தேசிய அளவில் மக்களை மீள்திறன்மிக்கவர்களாக உருமாற்றி முழுமையான எதிர்ப்புத் திறனை வளர்த்து ஜனநாயக முறைகளை கட்டமைக்கவேண்டும்,” என்று அதிபர் மாளிகையில் இருந்து வழங்கிய தமது தொலைக்காட்சி உரையில் திரு லாய் வலியுறுத்தினார்.

அமெரிக்கா தைவானுக்கு அண்மையில் பலவித ஆயுதங்களை விற்பனை செய்துள்ளதும், அத்தீவுக்கு ஆதரவாக ஜப்பான் வெளியிட்ட கருத்தும் சீனா தற்போது அதன் ராணுவ ஆதிக்கத்தைக் காட்டுவதற்கான காரணங்களாகும்.

அனைத்துலக சமூகத்தின் ஆதரவு எப்போதும் இருந்துவருகிறது என்று குறிப்பிட்ட அதிபர் லாய், தைவான் பொறுப்புள்ள, நம்பகத்தன்மை நிறைந்த சிறந்த நாடாக விளங்கிவருகிறது என்று கூறினார். மேலும் அதன் தற்காப்புக்கென ஒதுக்கப்பட்டுள்ள S$51.4 பில்லியன் (US$40 பில்லியன்) நிதிக்கான ஒப்புதலை எதிர்க்கட்சியினர் தடுக்காமல் ஆதரவு வழங்கும்படி கேட்டுக்கொண்டார்.

ராணுவத்தைக் கொண்டு சீனா மிரட்டுவதால், உள்நாட்டு பிரச்சினைகளை புறந்தள்ளி நேரம் தாழ்த்தாமல் தைவான் செயல்படவேண்டிய காலம் வந்துவிட்டது என்று அதிபர் லாய் மக்களிடம் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்