வாஷிங்டன்: அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கிரிஸ் வான் ஹோலன், செனட் சபைத் தலைவருக்கான போட்டியில் திரு சக் ஷூமருக்கு எதிராகப் போட்டியிடப்போவதாக வியாழக்கிழமை (நவம்பர் 12) அறிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற இடைத்தவணைக் காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி அறுதிப் பெரும்பான்மையை வென்றதை அடுத்து செனட் சபையின் தலைமைத்துவத்தில் திரு வான் ஹோலன் மாற்றத்தை ஏற்படுத்த விரும்புவதாகத் தெரிவித்தார்.
“வேலை செய்யும் மக்களுக்கு எதிராகத் திரும்பியுள்ள பொருளியலையும் அரசியல் ரீதியான ஊழலையும் மாற்றும்படி அமெரிக்கர்கள் நடந்துமுடிந்த தேர்தலில் எங்களுக்கு அழைப்புவிடுத்துள்ளனர். அதை நிறைவேற்ற புதிய தலைமைத்துவம் தேவை,” என்று 67 வயது வான் ஹோலன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
எனவேதான் தாம் செனட் சபைக்கான பெரும்பான்மைத் தலைவருக்குப் போட்டியிடுவதாக அவர் குறிப்பிட்டார்.
இம்மாதம் 3ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் 100 இடங்கள் கொண்ட செனட் சபையின் கட்டுப்பாட்டை வசப்படுத்திய ஜனநாயகக் கட்சி, நீண்டகால செனட் தலைவரான 75 வயது ஷூமர், புதிய தலைமைத்துவத்துக்கு வழிவிடும்படி கோரிவருகிறது.
இதற்கிடையே, திரு ஷுமருக்கு எதிராக வெளிப்படையாய்ப் போட்டியிடும் முதல் நபர் வான் ஹோலன் என்று தெரிவிக்கப்பட்டது.
ஜனநாயகக் கட்சிக்குள் அதிகம் குரல் கொடுப்போரின் ஆதரவை திரு வான் ஹோலன் பெற்றுள்ளார்.
மிஷிகனில் புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினரான எல் சாயிட் வான் ஹோலனுக்கு ஆதரவளிப்பதாகக் கூறினார்.
கட்சியின் எதிர்காலக் கலந்துரையாடல்களை வரவேற்பதாகக் கூறிய திரு ஷூமர், ஜனநாயகக் கட்சித் தலைவராக நீடிக்கப் போதுமான வாக்குகள் இருப்பதாகச் சுட்டினார்.
