தைப்பே: தைவான் தனது ஜனநாயகத்தைப் பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் சீனாவின் ஒரு பகுதியாக மாறுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் தைவான் அதிபர் லாய் சிங் தே ஞாயிற்றுக்கிழமையன்று (ஜூலை 19) தெரிவித்தார்.
அத்துடன், சீனா விடுக்கும் அச்சுறுத்தலை எதிர்த்து நிற்குமாறு ஆளும் ஜனநாயக முற்போக்குக் கட்சியின் உறுப்பினர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். தைவானின் தனித்துவமான அடையாளத்தை ஆதரிக்கும் அதிபர் லாய் மற்றும் ஆளும் கட்சியின் இந்த நிலைப்பாடு, தைவானைத் தன் நாட்டின் பிரிக்க முடியாத பகுதி எனக் கூறும் சீனாவை அடிக்கடி எரிச்சலூட்டி வருகிறது.
பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அதிபர் லாய் சீனாவுக்குத் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறார். ஆனால் அவரைப் பிரிவினைவாதி என்று சாடி, பேச்சுவார்த்தையில் ஈடுபட சீனா மறுத்து வருகிறது.
இதற்கிடையே, தைவானின் ஆளுங்கட்சியின் வருடாந்திர மாநாட்டில் தைவானின் ஹோக்கியன் மொழியில் பேசிய அதிபர் லாய், எல்லையைக் கடந்தும் ஆட்களைக் கைது செய்ய சீனாவுக்கு வழிவகுக்கும் அந்நாட்டின் புதிய ‘தேசிய ஒற்றுமைச் சட்டம்’ போன்ற சட்டபூர்வ அச்சுறுத்தல்கள் குறித்து தைவான் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார்.
தைவான் ஏற்கெனவே ‘ரிபப்ளிக் ஆஃப் சைனா’ என்ற அரசியலமைப்புப் பெயரைக் கொண்ட ஒரு சுதந்திர நாடு என்பதை மீண்டும் உறுதிப்படுத்திய அவர், தைவானின் எதிர்காலத்தை அங்குள்ள 23 மில்லியன் மக்களே கூட்டாகத் தீர்மானிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கடந்த பத்தாண்டுகளாக சீனாவின் ராணுவ, தூதரக நெருக்குதல்களுக்குத் தைவான் பணியவில்லை எனக் குறிப்பிட்ட அவர், ‘ஜனநாயகம் பலவீனம் அல்ல, அதுவே பலம்’ என்பதை தைவான் உலகிற்கு நிரூபித்துள்ளது என்று பெருமிதத்துடன் கூறினார்.

