நியூயார்க்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கு எதிராக அந்நாட்டு மக்கள் நியூயார்க் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் சனிக்கிழமை (ஏப்ரல் 19) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதிபராகப் பதவியேற்ற பிறகு திரு டிரம்ப்பின் கொள்கைகளைக் கண்டித்து இரண்டாவது முறையாக ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இதற்கு முன்னர் ஏப்ரல் 5ஆம் தேதி வெள்ளை மாளிகைக்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நியூயார்க் நகரின் பெரிய நூலகம் வெளியே “அமெரிக்காவில் மன்னர்கள் இல்லை” (No Kings in America) என்ற வாசகங்களை எழுதிய வாசகங்களுடன் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரும்பாலான ஆர்ப்பாட்டக்காரகள் திரு டிரம்ப்பின் குடிநுழைவு கொள்கைகள் குறித்து அக்கறைத் தெரிவித்தனர். தற்போது அதிபர் டிரம்ப் அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடுகடத்தி வருகிறார்.
அதிபர் டிரம்ப் ஹிட்லர் போல் நடந்துகொள்வதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட 73வயது மாது கேத்தி வாலி தெரிவித்தார். திரு டிரம்ப்பின் முடிவுகளை அவருடைய கட்சிக்காரர்களே எதிர்க்கின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.
டிரம்ப் நிர்வாகம் அடிப்படையான பல்வேறு சட்டங்களை மாற்றுவதாகப் போராட்டக்காரர்கள் குறைகூறினர். குடிநுழைவு, அரசாங்க ஊழியர்கள் குறைப்பு, பல்கலைக்கழகங்களுக்கு நெருக்கடி, சட்டத்துறை, ஊடகம் ஆகியவற்றுக்குக் கட்டுப்பாடுகள் என டிரம்ப் நிர்வாகம் எல்லைமீறிச் செல்வதாக அவர்கள் தெரிவித்தனர்.
50501 என்ற போராட்டக்குழு அமெரிக்காவின் 50 மாநிலங்களில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டதாகத் தெரிவித்தது. அதிபர் டிரம்ப்புக்கு எதிராகப் பல மில்லியன் மக்களை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள அழைப்புவிடுத்தது.
தொடர்புடைய செய்திகள்
ஆர்ப்பாட்டங்களில் பிரச்சினை ஏதும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகக் காவல்துறையும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இதற்கிடையே அதிபர் டிரம்ப்பின் நெருங்கிய நண்பரான இலோன் மஸ்க்கின் ‘டெஸ்லா’ கார் கடைகளுக்கு வெளியே போராட்டம் நடக்கிறது.
அமெரிக்க அரசாங்கத்தின் ஊழியர் அணியில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யும் நடவடிக்கையில் டிரம்ப் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. அதற்கு மஸ்க்கின் பங்கு அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.