லாஸ் ஏஞ்சலிஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) ஆர்ப்பாட்டக்காரர்கள் கார்களுக்குத் தீ வைத்து, பாதுகாப்புப் படையினருடன் மோதினர்.
குடிநுழைவு அதிகாரிகளின் நடவடிக்கையால், சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் மற்றும் குண்டர் கும்பல் உறுப்பினர்கள் எனக் கருதப்பட்டவர்கள் பலர் கைதுசெய்யப்பட்டனர். இதனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆத்திரமடைந்ததால் மூன்றாவது நாளாகக் கலவரம் வெடித்தது.
தமது இரண்டாவது பதவிக்காலத்தில் சட்டவிரோதக் குடிநுழைவை ஒடுக்கப்போவதாகக் கூறியிருந்த அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், கலிஃபோர்னியாவின் தேசியப் பாதுகாப்புப் படையினரை முடுக்கிவிட்டு, வேண்டுமென்றே பதற்றத்தைத் தூண்டியதாக எதிரணியினர் கூறினர்.
தயார்நிலை ராணுவமான அப்படையைப் பொதுவாகக் கட்டுப்படுத்தும் கலிஃபோர்னியா ஆளுநர் கெவின் நியூசொம், “டிரம்ப் இதில் சம்பந்தப்படும் வரை எங்களுக்குப் பிரச்சினை எதுவும் இருந்ததில்லை,” என்றார்.
அத்துடன், “மாநிலத்தின் இறையாண்மையை இது கடுமையாக மீறுகிறது. உத்தரவை ரத்து செய்யவும்! கலிஃபோர்னியாவுக்கு அதிகாரத்தைத் திருப்பித் தரவும்!,” என்றும் அவர் எக்ஸ் ஊடகப் பதிவில் குறிப்பிட்டார்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் குறைந்தது மூன்று தானியக்க வெய்மோ கார்கள் எரிந்ததுடன் மேலும் இரு கார்கள் சேதமுற்றன.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பலரும் சாலையில் குவிந்ததால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கலிஃபோர்னியா நெடுஞ்சாலை சுற்றுக்காவல் அதிகாரிகள் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைத்தனர்.
இந்நிலையில், படைகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது குறித்து திரு டிரம்ப்பிடம் கேட்கப்பட்டதற்கு, நாட்டின் பிற பகுதிகளிலும் அவை பரவலாக முடுக்கிவிடப்படுவது குறித்து சூசகமாகக் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“வன்முறையாளர்கள் இதிலிருந்து தப்பிவிட நாங்கள் அனுமதிக்க மாட்டோம். கடுமையான சட்ட ஒழுங்கு அமலாக்கத்தை மக்கள் பார்க்கவுள்ளனர்,” என்று செய்தியாளர்களிடம் அவர் சொன்னார்.
தேசியப் பாதுகாப்புக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காப்பு அமைச்சின் ஒரு பகுதியான அமெரிக்க வடக்குத் தளபத்தியம், தற்போதைய அரசாங்க நடவடிக்கைகளுக்குத் துணைநிற்க தேவை ஏற்படுமாயின், ஏறக்குறைய 500 கடற்படையினர் தயார்நிலையில் உள்ளதாகத் தெரிவித்தது.