தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் ஆர்ப்பாட்டக்காரர்கள், காவல்துறையினர் மோதல்

2 mins read
38abec55-ecad-42bc-bddf-8dda4b44b370
லாஸ் ஏஞ்சலிசின் மத்திய அரசுக் கட்டடத்தின் நுழைவாயிலுக்குள் போக முடியாமல் தடுத்த ஆர்ப்பாக்காரர்களில் ஒருவரைக் காவல்துறை கைது செய்கிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

லாஸ் ஏஞ்சலிஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் கலவரத் தடுப்புக் காவல்துறையினருக்கும் இடையே வெள்ளிக்கிழமை (ஜூன் 6) மாலை மோதல் ஏற்பட்டது.

நகரம் முழுவதும் குடிநுழைவுக் குற்ற முறியடிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட மறுநாள் மோதல் ஏற்பட்டது. முறியடிப்பு நடவடிக்கையில் பலர் கைது செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.

லாஸ் ஏஞ்சலிசின் மத்தியப் பகுதியில் அந்நகரக் காவல்துறையினர் லத்திகளைப் பயன்படுத்தி கண்ணீர்ப் புகைத் துப்பாக்கிகளை உபயோகித்ததுபோல் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட நேரடிக் காட்சிகளைக் கொண்ட காணொளியில் தெரிந்தது. இரவு தொடங்கும் நேரத்தில் கலைந்துபோகுமாறு காவல்துறையினர், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு உத்தரவிட்ட பிறகு அந்தக் காட்சிகள் காணப்பட்டன.

மோதல் தொடங்கியபோது ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் உடைந்த தரைத் தகடுத் துண்டுகளை (concrete) அதிகாரிகளை நோக்கி வீசினர். அதற்குப் பதிலடியாக காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் மிளகுத் தெளிப்பான்களைப் பயன்படுத்தினர்.

சிறிது நேரத்துக்கு ஒருவரைச் செயலிழக்க வைக்கும் ஃபிளே‌ஷ்-பேங் தோட்டாக்களையும் (flash-bang concussion rounds) காவல்துறையினர் சுட்டனர்.

சம்பவ இடத்தில் சிலர் சட்டவிரோதமாக ஒன்றுகூடினர் என்று காவல்துறை வகைப்படுத்தியதாக லாஸ் ஏஞ்சலிஸ் காவல் பிரிவுப் பேச்சாளர் டிரேக் மேடிசன் ராய்ட்டர்சிடம் தெரிவித்தார். அவ்வாறு வகைப்படுத்தும்போது சம்பவ இடத்தில் ஒன்றுகூடியவர்கள் அங்கிருந்து செல்லாவிட்டால் அவர்கள் கைது செய்யப்படலாம்.

லாஸ் ஏஞ்சலிஸ் நகரின் பல்வேறு பகுதிகளைக் குறிவைத்து அமெரிக்க குடிநுழைவு, சுங்கத்துறைக் கட்டுப்பாட்டுப் பிரிவு முறியடிப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாக அந்நகர செய்திப் பிரிவு (சிஎன்எஸ்) தெரிவித்தது. முறியடிப்பு நடவடிக்கையின்போது பலர் கைது செய்யப்பட்டதாகவும் சிஎன்எஸ் உள்ளிட்ட உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டன.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், சட்டவிரோதக் குடியேறிகளுக்கு எதிராகப் பெரிய அளவில் முறியடிப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதில் ஓர் அங்கமாக லாஸ் ஏஞ்சலிசில் மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கை விளங்குகிறது.

வரலாறு காணாத எண்ணிக்கையில் சட்டவிரோதக் குடியேறிகளைக் கைது செய்து நாடுகடத்தப்போவதாக குடியரசுக் கட்சியைச் சேர்ந்த திரு டிரம்ப் உறுதியளித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்