சியாங் மாய்: தாய்லாந்தின் சியாங் மாய் நகரைக் கடுமையான தூசுமூட்டம் மூடியுள்ளது. காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு அங்கு 2.5 என்ற கடுமையான நிலையைக் கடந்துள்ளது.
சனிக்கிழமை 4ஆம் தேதி நிலவரப்படி மே ரிம் வட்டாரத்தில் உள்ள நக்கோர்ன்பிங் மருத்துவமனையில் ஒரு கனசதுர மீட்டருக்கு 409 மைக்ரோகிராம் என்ற அளவில் காற்றின் தரம் பதிவானது. அது மனித சுகாதாரத்துக்கு மிகவும் ஆபத்தான நிலை என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.
மருத்துவமனை வெளியிட்ட காட்சிகளில் அடர்த்தியான தூசுமூட்டம் சுற்றுவட்டாரத்தைச் சூழ்ந்திருப்பதைக் காண முடிகிறது. அதன் காரணமாக அருகில் உள்ள கட்டடங்களைக் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மோசமான தூசுமூட்டம் நோயாளிகளை ஏற்கெனவே பாதித்துள்ளதாகச் சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். நச்சுமிகுந்த தூசுமூட்டத்தால் பலர் மூச்சுத் திணறலால் அவதியுறுகின்றனர்.
குடியிருப்பாளர்கள் உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தினர். வெளிப்புறங்களுக்குச் செல்வதைத் தவிர்த்தல், திறந்த வெளிகளில் நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது ஆகியவை அவற்றுள் அடங்கும்.
என்95 ரக முகக்கவசங்களை அணியும்படியும் அதிகாரிகள் அதிகம் வலியுறுத்துகின்றனர்.
வீட்டில் இருக்கும்போது சன்னல்களை மூடும்படியும் காற்றைச் சுத்திகரிக்கும் கருவிகளைப் பயன்படுத்தும்படியும் நிபுணர்கள் குறிப்பிட்டனர்.
இருமல், கண் எரிச்சல் போன்றவற்றால் சிரமப்படுவோர் மருத்துவர்களை நாடும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

