ஜெருசலம்: இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் எதிரான போர் காரணமாக காஸாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
காஸாவில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் மாண்டுவிட்டனர். பலர் காயமடைந்துள்ளனர்.
போதிய உணவு, மருத்துவச் சேவை இன்றி அவர்கள் அவதியுறுகின்றனர்.
காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் படாதபாடு படுகின்றன. இந்நிலையில், பட்டினியால் வாடும் தாதியர் பலர் பணியின்போது மயங்கி விழுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மற்றும் நோயாளிகளுக்கு உணவு வழங்க முடியாமல் மருத்துவமனைகளின் மேலாண்மைக் குழுக்கள் திணறுகின்றன.
போதுமான உணவு, தண்ணீர் இன்றி தவிக்கும் சிறார், பெரியவர்கள் ஆகியோருக்கு முறையான சிகிச்சை அளிக்கத் தேவையான ஊட்டச்சத்து திரவங்களின்றி குறைந்தது மூன்று பிரதான மருத்துவமனைகள் சிரமப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இத்தகவல்களை காஸாவில் உள்ள ஏழு மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர்.
அவர்களின் நால்வர் காஸாவைச் சேர்ந்தவர்கள்.
எஞ்சிய மூவர் ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தொண்டூழியர்கள்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த மாதங்களில் இஸ்ரேல் விதித்த கட்டுப்பாடுகள் காரணமாக அத்தியாவசியப் பொருள்கள் காஸா மக்களைச் சென்றடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே காஸாவெங்கும் மக்கள் பட்டியால் வாடுகின்றனர் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
பசிக் கொடுமை காரணமாக கடந்த ஜூலை மாதம் காஸாவில் குறைந்தது 56 பாலஸ்தீனர்கள் மாண்டனர்.
போதிய ஊட்டச்சத்து இல்லாததால் பச்சிளங் குழந்தைகளின் உடல்களால் மருந்துகளை ஏற்க முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
எனவே, அக்குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை என்று மருத்துவர்கள் கூறினர்.