பெட்டாலிங் ஜெயா: கடந்த 2014ஆம் ஆண்டில் மலேசிய அரசாங்கத்தைக் கவிழ்க்கத் தாங்கள் உதவ முன்வந்ததாகக் கூறப்படுவதை அந்நாட்டுக்கான அமெரிக்கத் தூதரகம் மறுத்துள்ளது.
பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் அவ்வாறு கூறியதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவின் அரசியல் தலைமைத்துவம் குறித்து முடிவெடுக்க அமெரிக்கா ஒருபோதும் முயற்சி செய்ததில்லை என்று மலேசியாவுக்கான அமெரிக்கத் தூதர் டேவிட் எச் கேம்பல் ஜூனியர் கூறியுள்ளார்.
“இதற்கு மாறாகக் கூறப்படும் எதுவும் பொய்யாகும்,” என்று அவர் அறிக்கை மூலம் தெரிவித்தார்.
2014ன் நிகழ்வுகள்
2014ல் மலேசிய அரசாங்கத்தைக் கவிழ்க்க அமெரிக்கா உதவிக்கரம் நீட்டியதாக திரு ஹாடி சனிக்கிழமை (செப்டம்பர் 5) பாஸ் கட்சிச் சந்திப்பின்போது கூறினார். அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மலேசியாவுக்கு வருகையளித்தபோது தூதரகத்தில் நடந்த சந்திப்பில் உதவி வழங்கப்பட்டதாக திரு ஹாடி சொன்னார். அச்சந்திப்பில் பாஸ் கட்சித் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
பாஸ் கட்சியின் அன்றைய துணைத் தலைமைச் செயலாளர் தாக்கியுதீன் ஹசானும் அப்போது தமது அரசியல் செயலாளராக இருந்த அகமது சாம்சுரி மொக்தாரும் அச்சந்திப்பில் கலந்துகொண்டதாக திரு ஹாடி கூறினார். தூதரகம் அளித்த உதவியை தாக்கியுதீனும் சாம்சுரியும் மறுத்ததாக அவர் தெரிவித்தார்.
பிறகு தனிப்பட்ட தம்மைச் சந்திக்க அமெரிக்கத் தூதர் கேட்டுக்கொண்டதாகவும் அச்சந்திப்பில் தாமும் அப்போதைய பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தஃபா அலியும் கலந்துகொண்டதாக திரு ஹாடி தெரிவித்தார். பாஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் பெயரை அமெரிக்கத் தூதர் கேட்டதாகவும் எந்த வேட்பாளரை அமெரிக்கா விரும்புகிறது என்று தாம் பதிலுக்குக் கேட்டதாகவும் அவர் விவரித்தார்.
இந்த விவகாரத்தை முன்னாள் மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மதிடம் கூறியதாக திரு ஹாடி தெரிவித்தார். அதற்கு டாக்டர் மகாதீர் அந்நிகழ்வை ‘நல்லது’ என வருணித்ததாக அவர் குறிப்பிட்டார்.
2018 பொதுத் தேர்தல்
2018ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தேசிய முன்னணிக் கூட்டணி தோல்வியடைந்தது. 1எம்டிபி விவகாரம், அப்போதையப் பிரதமர் நஜிப் ரசாக்மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் ஆகியவற்றைக் குறிவைத்து பக்கத்தான் ஹரப்பான் பிரசாரத்தில் ஈடுபட்டது.
பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றிபெற்றது. டாக்டர் மகாதீர் மலேசியப் பிரதமராகப் பொறுப்பேற்றார்.


