ஹனோய்: மத்திய கிழக்கில் போர் தொடங்கியதிலிருந்து வியட்னாமில் டீசல் விலை இருமடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. அந்நாட்டின் வர்த்தக அமைச்சு புதன்கிழமை (மார்ச் 25) வெளியிட்ட புள்ளிவிவரங்களில் இது தெரிய வந்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதியிலிருந்து டீசல் விலை சுமார் 105 விழுக்காடு கூடியது. அதற்கு இரண்டு நாள்களுக்குப் பிறகுதான் அமெரிக்காவும் இஸ்ரேலும்,ஈரான் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கின.
ஒரு லிட்டர் டீசல் விலையை வியட்னாம் அரசாங்கம் புதன்கிழமை 39,660 டோங்குக்கு (1.90 வெள்ளி) உயர்த்தியது. பிப்ரவரியில் அதன் விலை 19,270 டோங்காக இருந்ததென வர்த்தக அமைச்சின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
அதே காலகட்டத்தில் 95அக்டேன் வகை பெட்ரோல் விலையும் கிட்டத்தட்ட 68 விழுக்காடு கூடியது. அதன் விலை 20,150லிருந்து 33,840 டோங்குக்குக் கூடியது.
மத்திய கிழக்குப் பூசல் தொடங்கியதிலிருந்து எண்ணெய் விலை பெரிய அளவில் அதிகரித்து வருவதால் உலகளவில் பற்றாக்குறை ஏற்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.
தற்போது குவைத், கத்தார், அல்ஜீரியா, ஜப்பான் போன்ற நாடுகளை எரிபொருள் தொடர்பில் தங்களுக்கு உதவுமாறு வியட்னாம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், தங்கள் நாட்டிலும் ரஷ்யாவிலும் எண்ணெய், எரிபொருள் தயாரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் தொடர்பில் வியட்னாம், திங்கட்கிழமை (மார்ச் 23) ரஷ்யாவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

